இளநரை தொல்லை! தீர்வு என்ன?

என் வயது 35. நான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய தலைமுடி இப்போதே நரைக்க ஆரம்பித்து விட்டது. இன்னும் ஐந்து வருடங்களில் தலைமுடி முழுதும் நரைத்துவிடும் போல உள்ளது. நடிகர் அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் எல்லாம் திரையில் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் பொதுவாகவே நமக்கு தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். தலைமுடிக்கு டை அடிக்க சொல்லி நண்பர்கள் கூறுகிறார்கள். இருக்கும் சில நரைமுடியும் அதிகமாகிடுமோங்கிற பயத்தால் டை அடிப்பதை தவிர்த்து வருகிறேன். இளநரை ஏற்பட காரணங்கள் என்ன? இதற்கான சிகிச்சை முறைகள் உள்ளதா ?
- ராஜன், மும்பை.

“ஒருவரை நாம் மதிப்பீடு செய்யும் போது அவரின் தோற்றம் மிகவும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதில் குறிப்பாக தலைமுடி. சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைத்துவிடும். ஒரு சிலருக்கு 60வயசானாலும் தலைமுடி கருகுருவென்று இருக்கும். சிறுவயதிலேயே தலைமுடி நரைப்பதை இளநரை என்று குறிப்பிடுவோம்” என்கிறார் காஸ்மெட்டிக் டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் சித்ரா வி.ஆனந்த். “இளநரை என்பது இன மற்றும் பாலின பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் வரக்கூடிய பிரச்னைதான்.

தலைமுடி நரைப்பதின் தன்மை மற்றும் நரைக்கும் அளவுகளில் மாறுபாடுகள் தோன்றலாம். இந்த இளநரையை முற்றிலும் குணப்படுத்த முடியும். இளநரையின் பாதிப்பு இந்த தலைமுறை குழந்தைகள் மற்றும்   இளைஞர்களிடமும் அதிகமாகியுள்ளது. இந்த பிரச்சனையால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இருபது வயதுக்கு உட்பட்டோருக்கு இளநரை ஏற்படுவதால் அவர்களின் தன்னம்பிக்கை வெகுவாக குறைந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

காரணம் இளநரை எப்போதும் முதுமையின் அடையாளமாகவும், ஊட்டச்சத்து குறைபாடாகவும் கருதப்படுகிறது. மேலும் சிறுவயதில் இளநரை ஏற்படுவதால், அவர்களுக்கு வயதான தோற்றம் அளிக்கிறது. நமது முடியில் உள்ள நிறமியை (பிக்மென்ட்) உருவாக்க கூடிய  செல்கள் தான் மெலனினை தயாரிக்கிறது. அந்த மெலனின்தான் நமது தலைமுடிக்கு இயற்கையான நிறமான கருமையை கொடுக்கிறது.

வயது ஏற ஏற மெலனின் உற்பத்தி குறையும். சிலருக்கு அந்த மெலனின் உற்பத்தி இளம்வயதிலேயே குறைவதுதான், இளநரை ஏற்பட முக்கிய காரணமாகும். முடி நரைப்பதற்கு தனியொரு குறிப்பிட்ட காரணத்தை கண்டறிவது கடினம். முடி நரைத்தல் என்பது மிக சிக்கலான ஒரு உடலியல் செயல்பாடாகும். நமது பரம்பரை, ஊட்டச்சத்து, சுற்றுசூழல் என பலவிதமான காரணிகள் உண்டு.

* இளநரை, ஜெனிடிக் அடிப்படையில் பரம்பரை பரம்பரையாக வர வாய்ப்பிருக்கிறது.
* உடலில் இரும்பு, ஜின்க், காப்பர் ஆகிய தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவற்றின் குறைபாடுகளின் காரணமாகவும் இளநரை ஏற்படும்.
* புற ஊதாக்கதிர்களின் அதிகப்படியான தாக்கம், காற்று மாசு ஆகிய சுற்றுசூழலியல் காரணிகளும் மெலனின் உற்பத்தியைக் குறைக்கும்.
* தைராய்டு, விட்டிலிகோ, ஹார்மோன் சமநிலை இல்லாமை, அனீமியா ஆகியவையும் உடலின் மெலனின் உற்பத்தியை குறைத்து, இளநரைக்கு வழிவகுக்கும்.
* புகைப்பிடித்தல், மன அழுத்தம், அதிகப்படியான இரசாயன பயன்பாடு, தலைமுடிக்கான டை போன்றவை இளநரையுடன் தொடர்புடைய பிற காரணிகளாகும். தலைநரை நிரந்தரமானது எனவும் வேகமாக பரவக்கூடியது என்றும் கருதப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், தலைமுடி நரைத்தலை முற்றிலும் தடுப்பதற்கான சிகிச்சை முறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.
* இளநரையைத் தடுக்க டாப்பிகல் மெலட்டோனின் ஜெல் பூசலாம்,
* இளநரை தடுப்புக்கான டாப்பிக்கல் போட்டோ ப்ரொடக்டர்ஸும் யூவி ப்ளாக்கர்ஸும் பரிசோதனை
கட்டத்தில் உள்ளன.
* ஊட்டச்சத்து சப்ளிமென்ட்டுகளான ஜின்க், காப்பர், பயோட்டின், செலினியம், மெத்அயோனின், ஐ-சைட்டின் ஆகியவைகளை உட்கொள்ளலாம். உணவில் எப்போதும் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்
கொள்ளுதல் அவசியம்.
* மென்மையான ஷாம்பூ, அமோனியா இல்லாத ஹேர் கலர்கள், இயற்கையாக கிடைக்கக்கூடிய ஹென்னா ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது இளநரைக்கான சாத்தியக்கூறுகள் குறைகின்றன.

இளநரைக்கான காரணங்கள் பலவாறாக உள்ளதால், நாம் வீட்டில் இருந்தபடியோ அல்லது இந்த செய்தியில் குறிப்பிட்டு இருப்பதை கடைப்பிடித்துக் கொள்ளும் முன், சரும நிபுணர் அல்லது காஸ்மெட்டிக் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. நீங்கள் வீட்டில் இருந்தபடி சுயமாக செய்து பார்ப்பதை தவிர்க்கவும்” என்றார் காஸ்மெட்டிக் டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் சித்ரா வி.ஆனந்த்.

தொகுப்பு : ப்ரியா

× RELATED தங்கதமிழ்ச்செல்வனுக்கு எடப்பாடி அண்ணனா?: புகழேந்தி கேள்வி