தென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி

நன்றி குங்குமம் தோழி

தமிழில் ரமணிச்சந்திரன், அனுத்தமா போன்ற எழுத்தாளர்களை போல தெலுங்கில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் யத்தனபூடி  சுலோசனாராணி. தெலுங்கு வாசகர்கள் உலகின் நாவல் ராணியான இவர் தமிழ் வாசகர்களுக்கும் அறிமுகமானவர்தான். இவரது நாவல்கள்  பல தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1965 முதல் எழுத ஆரம்பித்த யத்தனபூடி சுலோசனாராணி பிறந்தது பழைய ஒருங்கிணைந்த  ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காஜா எனும் குக்கிராமத்தில். திருமணமாகி ஹைதராபாத் வந்த பிறகே இவரது  எழுத்துப் பணி துவங்கியது. இவரது பல நாவல்கள் மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கௌரி கிருபானந்தன்  என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் இயற்கை எய்திய யத்தனபூடி சுலோசனாராணி குறித்தான   நினைவலைகளை நம்மோடு இங்கே பகிர்ந்து கொள்கிறார் மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபானந்தன்.

“தெலுங்கு நாவல் உலகத்தை ஐம்பதாண்டு காலமாக கோலோச்சிய மகாராணி யத்தனபூடியின் நாவல்களின் தொடக்கம் ஹைதராபாத்  நகரத்தில் தொடங்கியது. 1957ல் ஹைதராபாத்தில் வசிக்கும் நரசிம்மா ராவுடன் திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டில் காலடி எடுத்து  வைத்தார். கிராமத்தில் வளர்ந்த அவருக்கு நகர வாழ்க்கை பழக்கம் ஆவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் புத்தகங்களை  தன்னுடைய நண்பர்களாக மாற்றிக் கொண்டார்.யத்தனபூடி சுலோசனாராணி என்றாலே எல்லோருக்கும் ஆறடி உயரம் கொண்ட  ராஜசேகர்(செக்ரெட்ரி நாவல் கதாநாயகன்), மூக்கின் மேல் கோபம் இருக்கும் ரோஜா (சங்கமம் நாவல் கதாநாயகி) நினைவுக்கு  வருவார்களோ என்னவோ. எனக்கு மட்டும் புன்னகையுடன் மலர்ந்த முகம், கம்பீரம் நிறைந்த எளிமையான தோற்றம்தான் நினைவுக்கு  வரும்.

அவர் படைத்தவை வெறும் காதல் கதைகள் இல்லை. பெண்ணை புதிய கோணத்தில், நாமும் இது போல் இருக்க முடிந்தால் நன்றாக  இருக்கும்  என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணும் விதமாக படைத்திருப்பார்.சுலோசனாராணி 1964ல் "செகரெட்ரி"யில் தொடங்கி  எழுபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி இருக்கிறார். எத்தனை முறை பிரசுரித்தாலும் மிக வேகமாக விற்பனை ஆகும் ஒரே ஒரு  எழுத்தாளர் அவர்தான். இலக்கிய உலகில் அவருடைய   பயணம்   அறுபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. பத்திரிகைகளில்  தொடராகவும், நேரடி நாவல்களாகவும் இவருடைய படைப்புகள் ஆந்திர மாநிலத்தையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டன.இவருடைய  நாவல்கள் வெளிவர தொடங்கிய பிறகுதான் புதினங்களை வாங்கி வீட்டிலேயே சொந்தமாக நூலகத்தை அமைத்துக் கொள்ளும் பழக்கம்  ஆந்திர மாநிலத்தில் உருவாயிற்று.

சாதாரணமாக ஒரு நாவல் வெளிவந்த பிறகு, அதன் கருவை, நடையை பொறுத்து பரபரப்பாக பேசப்படும். அந்த பரபரப்பு மேலும் ஒரு  பத்தாண்டுகள் நீடிக்கக்கூடும். மிஞ்சிப் போனால் இருபது ஆண்டுகள். ஆனால் "செகரெட்ரி" என்ற நாவல் வெளியாகி ஐம்பத்தி இரண்டு  ஆண்டுகள் கழிந்த பிறகும், இன்றும் அதே அளவுக்கு பேசப்படுகிறது. காரணம் அந்த படைப்பில் இருந்த புதுமை இன்றளவிலும் மாறாமல்  இருப்பது. செகரெட்ரி நாவல் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் ஆன போது தெலுங்கு வாசகர்கள் தங்கள் அபிமான எழுத்தாளர் யத்தனபூடி  சுலோசனாராணிக்கு பாராட்டு விழா நடத்தி கொண்டாடினார்கள்.

இது போன்ற கௌரவம் எழுத்தாளர்களுக்கு  கிடைப்பது அரிது.அதுவரையில் கதா நாயகி என்றால் அழகுப் பதுமையாக, அச்சம், மடம்,  நாணம், பயிர்ப்பு என்ற வகையில் சித்தரித்து வந்த படைப்புகளுக்கு மாறாக, அழகைவிட தனித்தன்மையும், சுயகௌரவமும் மிகுந்தவளாக  இவருடைய கதாநாயகி  வலம்  வந்த போது வாசகர்கள், முக்கியமாக பெண் வாசகர்கள் இவர் எழுத்துகள் பால் மிகவும் ஈர்க்கப்பட்டார்கள்.  இவருடைய படைப்புகளில், சிருஷ்டியில் ஆண், பெண் இருவரும் சமம் என்றும், அர்த்தநாரீஸ்வர தத்துவம் தான் சிறந்தது என்ற  கோட்பாடும் அடிநாதமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். நாவலில் ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ ஒரு வகையில் சிறப்புப்பெற்று  இருக்கும்.

தன்னுடைய எழுத்துப் பயணத்தில் மைல் கல்லாக நிலைத்துவிட்ட "செகரெட்ரி" என்ற நாவலை தன்னுடைய இருபத்தி நான்காவது  வயதில் படைத்தார். இதுவரையில் நூறு பதிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பெருமை இதுவரையில் எந்த எழுத்தாளருக்கும்  கிடைத்ததில்லை.ஒரு தலைமுறை கடந்து அடுத்த தலைமுறை வாசகர்கள் வந்துவிட்ட போதிலும் சில விஷயங்களில் பெண்களின்  எண்ணங்களில், கருத்துக்களில், எதிர்பார்ப்புகளில் மாற்றம் இல்லை. சுயகௌரவம், சுய வருமானம் இவற்றை விரும்புவதுடன், சிறந்த ஒரு  ஆண் மகன் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். செகரெட்ரி தொடராக வந்து கொண்டிருந்த நாட்களில்,  தெலுங்கு வாசகர் குடும்பங்களில் ஜெயந்தியும், ராஜசேகரும் வீட்டில் நடமாடும் நபர்களாகவே ஆகிவிட்டிருந்தார்கள் என்றால் அது  மிகையில்லை.

காலத்தையும் தாண்டி ஒரு படைப்பு வாசகர்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அதன் கரு வாசகர்களின் மனதில் புத்தம்  புதிதாக இருக்க வேண்டும். அந்த வகையில் அவருடைய அனைத்து நாவல்களுமே அந்த அளவுகோலை தொட்டு விட்டன. செகரெட்ரி நாவல் யத்தனபூடி சுலோசனாராணியை வாசகர் உலகத்தில் முதலாவது இடத்தில் நிற்கவைத்து விட்டது. பின் வரும் நாளில்  ஆண் எழுத்தாளர்களில் சிலர் தங்களுடைய படைப்புகளை சொந்த பெயரில் அனுப்பி வைத்தால் பிரசுரமாவதில்லை என்று, பெண் பெயரில்  அனுப்பி வைக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது. இந்த புதினம் அதே தலைப்பில் திரைப்படமாக வெளிவந்து வெற்றியும் பெற்றது.இதனுடைய தமிழாக்கம் அதே தலைப்பில் அல்லயன்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப் பட்டிருக்கிறது.

இவருடைய நாவல்கள் தெலுங்கில் திரைப்படமாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளியாகி உள்ளன.அவருடைய படைப்புகளை  தமிழ் வாசகர்களுக்கு கொண்டு போய் சேர்க்கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி எனக்கு. தமிழில் வெளிவந்த  அவருடைய படைப்புகள் சங்கமம், முள்பாதை, நிவேதிதா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், செகரெட்ரி, சிநேகிதியே, அன்னபூர்ணா,  விடியல், சம்யுக்தா, மௌனராகம், இதயகீதம், தொடுவானம், நிவேதிதா... இவற்றை அல்லயன்ஸ் கம்பெனி பதிப்பித்து இருக்கிறது."விடியல்" பெண் பத்திரிகை ஒன்றில் தொடராக வெளிவந்தது.சொப்பனசுந்தரி, சீதா(வின்)பதி, இதயவாசல், புஷ்பாஞ்சலி, வானவில்  புத்தகாலயம் பதிப்பித்து உள்ளது.அவருடைய படைப்புகள் தாகத்தைத் தீர்க்கும் குளிர்ந்த நீரூற்றுகள்.

அவர் படைத்த பெண் பாத்திரங்கள் நடுத்தர வர்க்க பெண்களின் மனதில் தன்னம்பிகையை விதைத்தன என்றால் அது மிகையில்லை.திருமணம்,  குழந்தைகள்,  குடித்தனம்இவை மட்டுமே இல்லாமல் அதற்கு இணையாக தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை பெண்கள்  உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று படைப்புகள் மூலமாக எடுத்துச் சொன்ன பெண்ணியவாதி.யத்தனபூடி சுலோசனாராணி சொன்னது  ஒன்றுதான். "சமூக சேவை என்று தனியாக செய்ய வேண்டியது இல்லை. உங்கள் பங்களிப்பாக இயலாதவர்களுக்கு, குழந்தைகளுக்கு,  முதியவர்களுக்கு தகுந்த விதமாக உதவி செய்யுங்கள்."  இதனைவெறும் பேச்சாக இல்லாமல்  கடைப் பிடித்தும் வந்தார்.தன் எழுத்துகளால்  சாகாவரம் பெற்ற யத்தனபூடி சுலோசனாராணி வாசகர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

-கௌரி கிருபானந்தன்

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்

Related Stories: