சாவியை காணோமா?உடனே தேடுங்க!

நன்றி குங்குமம் தோழி

25 வயதாகும் சோனால் அகர்வால்; டாக்டர் அவினாஷின் மனைவி.பெங்களூர் உத்தரஹள்ளியில் மேல் நடுத்தர மக்கள் வசிக்கும் ஒரு அடுக்குமாடிக்  குடியிருப்பில், 505-ம் ஃப்ளாட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் இவர் 5-வது மாடியிலிருந்து குதித்து இறந்து போனார். இந்த விபத்து இரவு 7.30 மணி அளவில் நடந்தது. இவருடைய கணவரும், அந்த ப்ளாட்டைச் சார்ந்தவர்களும் கீழே கணபதி பூஜை செய்வதில் கலந்து கொண்டிருந்தனர்.

ஏதோ... ‘டமார்’ என சப்தம் வருவதை கேட்டு ஓடிப்போய் பார்த்தபோது சோனால் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து அவினாஷின் கம்ப்ளை யின்டில், ‘அவள் குதித்து இறக்கவில்லை. அல்லது விபத்துமல்ல. மாறாக கீழே தள்ளி விடப்பட்டுள்ளார்’ எனக்கூறி அதுபற்றி விசாரிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். அவர் சட்டீஸ்கரை சேர்ந்தவர். இதனால் மனைவியின் உடலுடன் தற்போது அங்கு சென்றுள்ளார்.

அவர் திரும்பிவந்து விசாரிக்கப்படும் போது மேல் விவரம் தெரிய வரும். இதனிடையே இதே அபார்ட்மென்டில் இதே ஐந்தாவது மாடியில், 501-ம் வீட்டில் வசிக்கும் பிரசாத் என்பவர், தனது வீட்டிலிருந்து நகைகள், பணம் போன்ற மதிப்பு மிக்கவை காணாமல் போயுள்ளது. அதனை கண்டுபிடித்து தரவேண்டும் என ஒரு கம்ப்ளையின்ட் கொடுத்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்.

சோனாலுக்கு ஏற்கனவே 1½ வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருந்தார். சோனாலுடன் அவளுடைய சகோதரியும் தங்கியிருந்தார். போலீஸின் விசாரணையில், சோனால் 501-ம் வீட்டின் பால்கனியிலிருந்துதான் குதித்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்துள்ளனர். அப்படியானால் சோனால் 501-ம் வீட்டிற்கு எதற்கு போனாள்? இன்னும் கொஞ்சம் விவரமாக பார்ப்போம்...

பிரசாத் வீட்டு சாவிக்கொத்து ஒரு வாரமாக காணோம். அடிப்படையில் கொஞ்ச நாள் தேடியவர்கள், சரி குழந்தைகள் விளையாட்டு சாக்கில் அதனை எங்காவது எடுத்து போட்டிருக்க வேண்டும் என விட்டு விட்டனர். சம்பவ தினத்தன்று, எல்லா அபார்ட்மென்ட் வீடுகளிலும் நடப்பது போல், கீழே கணபதி பூஜை நடக்கிறது என 501-ம் வீட்டினர், வாசற்கதவை சாத்தி வெறுமனே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு கீழே சென்றிருக்கலாம்.

அவினாஷ் மட்டுமே அன்று பூஜையில் கலந்துகொண்டார். சோனாலும் அவர் சகோதரியும் வீட்டில் இருந்துள்ளனர். இதற்குப்பின் நடந்ததுதான் சஸ்பென்ஸ். நட்பு ரீதியாக சோனால்,  பிரசாத் வீட்டு சாவிக்கொத்தை,  அவர் வீட்டுக்குச் சென்றபோது, தந்திரமாக யாரும் கவனிக்காத சூழலில்  எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

அடுத்து கீழே சென்ற பிரசாத் குடும்பம் திரும்ப கொஞ்ச நேரமாகும் என தெரிந்து, தாழ்ப்பாளை திறந்து உள்ளே சென்று நகைகள் மற்றும் மதிப்புமிக்கவற்றை எடுத்துக்கொண்டு, ஒன்றும் தெரியாததுபோல் வெளியே வந்து, மீண்டும் பிரசாத் வீட்டு வாசற்கதவை, தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தன் வீட்டிற்கு திரும்பிவிட திட்டம் தீட்டியிருக்க வேண்டும்.

திட்டமிட்டபடி உள்ளே எடுக்க வேண்டியதை  எடுத்துக்கொண்டு, வாசலை ேநாக்கி திரும்ப வந்தபோது, பிரசாத் குடும்பத்தினர் வந்திருக்க வேண்டும். இது சமயம் சோனால் உட்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால், ஏன் வீட்டின் உட்பக்கம் தாழ்ப்பாள் போட்டுள்ளது. யார் தாழ்ப்பாள் போட்டிருப்பார்கள் என சந்தேகப்படும்போது, யாரோ ஒருவர் ஒரு அறைக்குச்சென்று, பால்கனி மூலமாக குதிப்பது தெரிந்துள்ளது.

அதற்கு ஏற்ப கீழே விழுந்த சப்தம் கேட்க, உடனே அவர்கள் கீழே ஓடி வந்து பார்த்துள்ளனர். சோனாலின் உடல் கிடப்பது கண்டு திகைத்துள்ளனர். இதனிடையே போலீசாரின் சோதனையில், சோனால் அணிந்திருந்த உள் ஆடையின் உள்ளே நகைகள், மொபைல் போன், சாவி ஆகியவற்றை கண்டுபிடித்து எடுத்துள்ளனர். எதற்காக சோனால் 501-க்குச் சென்றாள்? கீழே குதிக்க காரணமென்ன? ஏற்கெனவே சோனால் - அவினாஷ் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகின்றன. அவினாஷை மேலும் விசாரிக்கும்போது உண்மை வெளிவந்துவிடும். ஆக, அக்கம் பக்கத்தில் வசித்தாலும், மறக்காமல் வீட்டை பூட்டிச் செல்லவும்.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்,
பெங்களூர்.

× RELATED வேலை தேடி திருப்பூர் வரும் வட மாநில மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல்