×

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: சர்க்காரியா கமிஷன் பற்றி விவாதிக்க அதிமுகவினர் யார் வந்தாலும் நான் தயார்: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் காவலான்கேட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சி நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் சேகரன், துணைச்செயலாளர்கள் வசந்தமாலா, தசரதன், வெளிக்காடு ஏழுமலை, பொருளாளர் கோகுலக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நாகன், விஸ்வநாதன், நெசவாளர் அணி அன்பழகன், தொண்டர் அணி சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசியதாவது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டமெல்லாம் இன்னும் மூன்று அமாவாசைகள் தான். அவர் எந்த ஜெயிலுக்கு போக வேண்டும் என அவரே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

திமுகவினர் எதற்கும் அஞ்சியவர்கள் இல்லை. சிறைச்சாலைகளின் கதவுகளை எல்லாம் பலமுறை முத்தமிட்டவர்கள். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட எங்கள் திமுக தொண்டர்களை  சேலத்தில் தற்போது காவல்துறையினர் மூலம் கைது செய்து அடக்குமுறையை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மறைந்த கலைஞரை பற்றி பேச முதலமைச்சருக்கு தைரியம் எங்கு இருந்து வந்தது. அமித்ஷா தமிழகம் வந்து போன பிறகு தான் அவருக்கு தைரியம் வந்தது. நீங்கள் அமித்ஷாவை தான் பார்த்துள்ளீர்கள். நாங்கள் கவர்னராக இருந்த  கே.கே.ஷாவையே பார்த்து அரசியல் நடத்தியுள்ளோம். நான் அரசியலுக்கு வரும்போது அமித்ஷா பிறக்கவே இல்லை. நான் அரசியலுக்கு வந்தே 60 ஆண்டுகள் ஆகிறது .அமித்ஷாவுக்கு 56 வயது தான் ஆகிறது. அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே நான் அரசியலுக்கு வந்து விட்டேன். ஆனால் இன்று எங்களை பார்த்து சர்க்காரியா கமிஷன் பற்றி முதலமைச்சர் பேசுகிறார் என பேசினார். சர்க்காரியா கமிஷன் பற்றி முதலமைச்சருக்கு என்ன தெரியும். சர்க்காரியா கமிஷன் பற்றி என்னோடு விவாதிக்க அதிமுகவினர் யார் வந்தாலும் நான் தயார் என்றார்.

தொடர்ந்து, மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நடைபெறும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேச வேண்டும் என கோஷமிட்டனர். இதில் எம்பி சிறுவேடல் செல்வம், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், ராமச்சந்திரன், கண்ணன், ஸ்ரீதர், ஞானசேகரன், சேகர், சத்தியசாய், குமணன், ஏழுமலை, தம்பு, சரவணன், பூபாலன், இளைஞர் அணி, அப்துல்மாலிக். மகளிர் அணி செல்வி, மாணவர் அணி அபுசாலி, வழக்கறிஞர் அணி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, இதயவர்மன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கொட்டும் மழையிலும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாம்பரம் காமராஜ், ஜோதிகுமார், ரங்கநாதபுரம் ரவி, செல்வகுமார், பாரதி, செம்பாக்கம் சுரேஷ், லட்சுமிபதி ராஜா, ஆதிமாறன், வேல்மணி, வேல்முருகன், கருணாகரன், குறிஞ்சி சிவா, ஹரிஸ் (எ) அன்பு, ஹரிஷ் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags : protests ,anyone ,DMK ,Sarkariya Commission: Organizational Secretary , DMK protests in support of farmers: I am ready to discuss AIADMK's Sarkaria Commission with whoever comes: Organizational Secretary RS Bharathi Challenge
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...