×

சாதித்தார் தமிழ்ச்செல்வி

நன்றி குங்குமம் தோழி

பல்வேறு இன்னல்களைக் கடந்து சட்டப்போராட்டம் நடத்தி இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் மாணவி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், இன்றைய சூழலில் எவ்வளவு ஒடுக்குமுறைகள் இருந்தாலும் கூட தங்களுடைய கடின முயற்சியால் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து சாதித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழ்நாட்டில் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வந்துள்ளனர். இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் மாணவி தமிழ்ச்செல்வியிடம் பேசினேன்.“வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், புளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவள் நான். எனக்கு அப்பா கிடையாது. அப்பா இறந்து 18 ஆண்டு கள் ஆகிறது. அம்மா மட்டும்தான், தங்கை ஒருவர் இருக்கிறார்.

சிறு வயதிலே என்னுடைய மாற்றத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ள வில்லை. 12 ஆம் வகுப்பு முடித்த பிறகுதான் நான் அறுவைசிகிச்சை செய்து கொண்டு முழுமையான திருநங்கையாக மாறினேன். நான் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை என்னு டைய மாற்றத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாததால் பொதுச்சமூகத்தில் இருந்துவரும் கேலி, கிண்டல்களை அதிகம் நான் எதிர்கொள்ளவில்லை.

அதே சமயம், பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது போன்றவற்றில் எனக்கு உடன்பாடில்லை. படிக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு இருந்தேன். ஒரு முழு திருநங்கையாகவே நான் மேற்படிப்பு படிக்க விரும்பினேன். செவிலியர் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காக அரசுக் கல்லூரியில் கலந்தாய்வுக்காக பதிவு செய்திருந்தேன். என்னுடைய கவுன்சிலிங் நம்பர், என்னுடைய பெயர் எல்லாம் வந்துவிட்டது.  

ஆனால் திருநங்கை என்கிற காரணத்தால் கலந்தாய்வுக்கு எனக்கு அழைப்பு வரவில்லை என்பதை கல்லூரிக்குச் சென்றபோது தெரிந்து கொண்டேன்.
இனி அரசுக் கல்லூரியை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று, தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். 40 ஆயிரம் கட்டணம் கொடுத்து கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.

மிகவும்  ஏழ்மையான குடும்பம், பொருளாதாரப் பிரச்சனை இவற்றை எல்லாம் சமாளித்துத்தான் தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். 6 மாதங்கள்வரை கல்லூரியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதன்பிறகுதான் எனக்கு சிக்கல் தொடங்கியது. மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து திருநங்கையை செவிலியராகப் பயில அனுமதிக்கக்கூடாது. அவரை உடனடியாக வெளியில் அனுப்ப வேண்டும் என்று கடிதம் வந்தது.

எனக்கு வந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வோர் அலுவலகமாக திரிந்தேன். மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று கேட்ட போது ‘நீங்கள் படிக்கலாம், அதற்குத் தடை இல்லை. இந்தக் கடிதம் குறித்து தேர்வு கமிட்டியை சந்தித்து கேளுங்கள்’ என்றனர். அங்கு சென்றால் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அலுவலகம் சென்று கேட்கச் சொன்னார்கள். அங்கும் சென்று கேட்டேன்.

‘எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது; இந்தக் கடிதத்திற்கு இந்தியன் நர்சிங் கவுன்சிலில்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்றனர். இந்தியன் நர்சிங் கமிட்டிக்கு என்னுடைய சான்றிதழ்கள் அனைத்தும் எடுத்துக்கொண்டு சென்று கேட்டதற்கு ‘இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாடு அரசைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று கூறிவிட்டனர்.

சுகாதாரத்துறை, சமூக நலத்துறை என்று ஒவ்வோர் அலுவலகமாக சென்றேன். ஆனால் எந்தத் தீர்வும் எனக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக அரசிடம் ‘எனக்கு படிப்பதற்கு அனுமதி கொடுங்கள் அல்லது என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்’ என்று கடிதம் எழுதினேன்.
அதன் பிறகுதான் திருநங்கைகள் செவிலியர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணையைப் பிறப்பித்தது.  

‘உங்களுக்கு அரசு இடஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. அதில் நீங்கள் சேர்ந்து படிக்கலாம்’ என்றார் சுகாதாரத் துறை செயலாளர். கடந்த ஆண்டு போலவே என்னுடைய பெயர் ரேங்க் லிஸ்ட்டில் வந்தது. அனைவரும் எனக்கு நிச்சயமாக சீட் கிடைத்துவிடும் என்றனர். ஆனால் எனக்கு இந்த ஆண்டும் கலந்தாய்வுக்கான கடிதம் வரவில்லை. அதன் பிறகு (TRNC) அமைப்பை அணுகினேன்.

பானு, அனு, பிரித்திகா யாஷினி போன்றவர்கள் என்னை வழிநடத்தினார்கள். வழக்கறிஞரை சந்தித்து தமிழக அரசு மீது வழக்குப்பதிவு செய்தோம். ‘தமிழ்ச்செல்வி படிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அவருக்கு ஒரு சீட் வழங்க வேண்டும்’ என்று இடைக்காலத் தீர்ப்பு வந்துவிட்டது. இந்தியாவின் முதல் செவிலியர் திருநங்கை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இன்னும் எனக்கு இறுதித் தீர்ப்பு வரவில்லை.  இறுதித் தீர்ப்பு வந்ததும் கல்லூரிக்குச் செல்வேன். திருநங்கைகள் முன்னேறலாம் என்று வாய்மொழியாக கூறுகிறார்களே ஒழிய, அதற்கான எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை, எடுப்பதற்கும் முன்வரவில்லை. ஒவ்வொரு முறையும் சட்டப்போராட்டம் நடத்தியே எங்களுக்கான உரிமைகளை நாங்கள் பெற வேண்டியிருக்கிறது.

எங்களுக்கு அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். எங்களுக்கு அடிப்படை கல்வியும், வேலைவாய்ப்பையும் கொடுத்தாலே போதும் நாங்களே எங்களை முன்னேற்றிக்கொள்வோம்” என்கிறார் தமிழ்ச்செல்வி.

-ஜெ.சதீஷ்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!