×

இன்று போய் 9ம் தேதி வாராய்...அமைச்சர்களுக்கு அவகாசம் அளித்த விவசாயிகள்

* நேற்றைய பேச்சுவார்த்தையின்போது, சில பிரதிநிதிகள், ‘யெஸ் ஆர் நோ’ என்ற பதாகைகளை ஏந்தியபடி கூட்டத்தில் பங்கேற்றனர்.
* முந்தைய பேச்சுவார்த்தைகளின் போலவே, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளையே விவசாய பிரதிநிதிகள் உண்டனர்.

புதுடெல்லி: `வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமா? முடியாதா?’ பேச்சுவார்த்தையின்போது விவசாய சங்க பிரதிநிதிகள் கேட்ட தீர்க்கமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய மத்திய அமைச்சர்கள், ‘மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் போது உறுதியான திட்டத்தை தெரிவிக்கிறோம். அதற்கு அவகாசம் தாருங்கள்,’ என கேட்டதால், விவசாயிகள் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளனர்.விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களின் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவற்றை திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா விவசாயிகள் கடந்த 26ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி புராரி மைதானம், டெல்லி-அரியானா, டெல்லி-உபியை இணைக்கும் சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைகளை ஆக்கிரமித்து போராடுவதால், டெல்லிக்கு செல்லும் அனைத்து வழிகளும் முடக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1ம் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு தரப்பில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர். ஆனால், விவசாயிகள் இதை ஏற்க மறுத்ததால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 3ம் தேதி விவசாயிகளை டெல்லி விக்யான் பவனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 3 சுற்றுகளாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த  முடிவும் எட்டப்படவில்லை.

இரண்டு நாட்கள், 4 சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், நேற்று 3வது நாள் பேச்சுவார்த்தை நடந்தது. இது, 5ம் சுற்று பேச்சாக அமைந்தது. இதில், கடந்த முறைகளை போல் இல்லாமல் விவசாய சங்க பிரதிநிதிகள் விரைப்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். ‘சட்டங்களை ரத்து செய்ய முடியுமா? முடியாதா?’ என ஒற்றை வரியில் பதில் சொல்லுங்கள் என அமைச்சர்களிடம் நேரடியாக கேட்டனர். இதனால், அமைச்சர்கள் சிறிது திகைத்தனர். ‘சட்டங்களை ரத்து செய்யும் வரையில், எங்களின் போராட்டம் தடைகளை மீறி தொடரும். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்காவிடில், மவுன விரதம் இருப்போம்,’ என்றும் தெரிவித்தனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர்கள், ‘அடுத்த சுற்று பேச்சுவார்த்தையின் போது உறுதியான திட்டத்தை கொடுக்கிறோம். அதற்கு அவகாசம் தாருங்கள்,’ என்று கேட்டுக் கொண்டனர். இதற்கு ஒப்புதல் கொடுத்த விவசாய சங்க பிரதிநிதிகள், 9ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டு
 கிளம்பினர்.

ஐநா பொதுச் செயலாளர் ஆதரவு
டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் கூறுகையில், ``இது போன்ற பிரச்னைகள் வரும் போது, மற்ற உலக நாடுகளுக்கு என்ன கூறினோமோ, அதுவேதான் இந்தியாவுக்கும் கூட. அமைதியான முறையில் போராட மக்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் போராட அரசு அனுமதிக்க வேண்டும்,’’ என்றார்.

கனடா பிரதமர் மீண்டும் குரல்
டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து கூறியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், அதையும் மீறி நேற்று மீண்டும் அவர், ``உலகின் எந்த மூலையில் நடந்தாலும், அமைதியான போராட்ட உரிமைக்கு ஆதரவாக கனடா எப்போதும் துணை நிற்கும்,’’ என்று தெரிவித்தார். இது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.Tags : ministers , Go today and come on the 9th ... the farmers who gave the opportunity to the ministers
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு