×

13 வயது மகளை கண்டுபிடிக்காமல் ஏளனம் பேசியதால் இன்ஸ்பெக்டரின் அடாத செயலை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த தந்தை

* மருத்துவமனையில் உயிரிழப்பு
* போலீசார் மீது குற்றச்சாட்டு

சென்னை: எட்டாம் வகுப்பு படிக்கும் தன் 13 வயது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்து 3 நாள் ஆகியும், இன்ஸ்பெக்டர் ஆபாசமாக திட்டியதால் மனமுடைந்த தந்தை, சேலையூர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிர் இழந்தார். இதற்கு காரணமான சேலையூர் இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அடுத்த தாம்பரம் காமராஜபுரம், பவணந்தியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (44). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரம்யா(38). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள், 11 வயதில் ஒரு மகன் உள்ளனர். இவரது மகள் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி அதிகாலை இவரது மகள் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதனால், அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு எனப் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து சீனிவாசன், தனது மகளைக் காணவில்லை என சேலையூர் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அச்சிறுமிக்கும் காமராஜபுரம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த  முதலாம் ஆண்டு  கல்லூரி மாணவருக்கும் இடையே, ஏற்பட்ட காதலால், இருவரும்  வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்தது.  அதன் பின்னர் ஓடியவர்கள் திருமணம் செய்த பின்பு திரும்பி விடுவார்கள் என்று கூறிய சேலையூர் போலீசார், ஆட்டோக்காரரின் மனம் நோகும்படியும், மகளை சரியாக வளர்க்கவில்லை என்றும் ஏளனமாக பேசி உள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கும் போலீஸ் நிலையத்துக்கும் டிரைவர் சீனிவாசன் அலைந்து திரிந்துள்ளார். இது குறித்து, சீனிவாசன் சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசனிடம் 13 வயது மகளை மீட்டு தாருங்கள்.

 அவளுக்கு வெளியுலகம் தெரியாது என்று அழுதபடி கூறி உள்ளார். அதை கேட்ட இன்ஸ்பெக்டர், ‘‘வளர்க்கும்போது ஒழுங்காக வளர்க்காதே. உன் மகள் காதலனுடன் தானே ஓடிபோனால். திரும்பி வந்துவிடுவார். இந்த போலீஸ் ஸ்டேஷனில் உன் மகளை கண்டுபிடிப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலையே இல்லையா அலட்சியமாக’’ கூறினாராம். இதனால் மகள் போன வேதனையில் இருந்த சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஏளன பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் இன்ஸ்பெக்டரின் அலட்சியம் மற்றும் ஏளன போக்கை கண்டித்து சேலையூர் காவல் நிலையத்திற்கு நேற்று பெட்ரோல் கேனுடன் வந்தார் சீனிவாசன். பின்னர் மகளை மீட்டு தர வேண்டும். இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டு  பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீயிட்டுக் கொண்டார்.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரைகொண்டு சென்றனர். பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், எனது மகள் காணாமல் போனது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எவ்வித  நடவடிக்கை எடுக்காததால்தான் எனது கணவர் தீக்குளித்தார் என சீனிவாசனின் மனைவி ரம்யா சேலையூர் காவல் நிலைத்தில் புகார்  அளித்தார். இதுகுறித்து சீனிவாசனின் உறவினர்களிடம் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் திட்டியது மற்றும் மகள் காணாமல் போனதால் டிரைவர் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான கல்லூரி மாணவன், இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மைனர் பெண் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கை தேவை என்று ஆவேசமாக கூறினர்.

Tags : police station ,inspector , Father sets fire to 13-year-old daughter in police station
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து