×

5வது நாளாக தொடர் மழை 3.6 லட்சம் ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது : 50,000 வீடுகள் நீரில் மிதக்கின்றன

திருச்சி: தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று 5வது நாளாக அடை மழை பெய்தது. ஆறு, வாய்க்காலில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாகை, தஞ்சையில் பல இடங்களில் கரைகள்  உடைப்பு ஏற்பட்டு வயல்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் 3.6 லட்சம் ஏக்கரில்  நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 50 ஆயிரம் வீடுகள் நீரில் மிதக்கிறது. புரெவி புயல் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை கொட்டி  தீர்த்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களில் மழையால் 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான கோயில்கள், வீடுகளுக்குள்  வெள்ளம் புகுந்தது. நாகை, தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுவதால் கரைகள் உடைப்பெடுத்து வயல்களுக்குள் தண்ணீர்  புகுந்துள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில்  மூழ்கி கிடக்கிறது. இளம் பயிர்களாக உள்ளதால் அழுகும் அபாயத்தில் உள்ளது.  இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். இதேபோல் பல்வேறு இடங்களில்  ஆற்று பாலங்கள், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள்  துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில்  நேற்றும் பலத்த மழை பெய்தது. கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்குள் தண்ணீர்  புகுந்தது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து மிதக்கும் கடலூர்: புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கொளக்குடி, குறிஞ்சிப்பாடி, கல்குணம், ஓணான்குப்பம், வளையமாதேவி, பின்னலூர் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், பெருமாள் ஏரியில் இருந்து 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆடுர்அகரம், பூவாணிக்குப்பம், மேட்டுயாளையம், சிந்தாமணிக்குப்பம், தீர்த்தனகிரி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் வெள்ளியங்கால் ஓடை மற்றும் விஎன்எஸ் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், எள்ளேரிகிழக்கு, நடுத்திட்டு, செங்கழனிர்பள்ளம், நந்திமங்கலம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மாவட்டம் முமுவதும் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதியில் இருந்து 48 ஆயிரம் பேர் கொளக்குடி, குறிஞ்சிப்பாடி, திருநாரையூர், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக வேளாண்மைதுறை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி கூறும்போது, மழை பெய்த மாவட்டங்களில் இதுவரை எடுக்கப்பட்ட முதல் கட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 3.6 லட்சம் ஏக்கர் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது என தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீடூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான,விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தில் கடல் அரிப்பால் மீண்டும் வீடுகள் சேதமடைந்ததால் மீனவ மக்கள் நேற்று இசிஆரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து உபரி நீர் 3 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி: புரெவி புயல் வலுவிழந்த நிலையில் நெல்லை, ெதன்காசி, தூத்துக்குடியில் பல இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில் சுமார் 4800 ஏக்கரில் கடந்த புரட்டாசி மாதம் முதற்கட்டமாக மக்காச்சோளம், வெள்ளைசோளம், உளுந்து, பாசி, கம்பு, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, குதிரைவாலி, நெல், கொண்டைக்கடலை போன்றவை பயிரிடப்பட்டது. அடைமழையால் சுமார் 1000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

இழப்பீடு கோரி மறியல்: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகன் (41). இவர் கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணி புரிந்து வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தேவராஜ் நகரில் மின்கம்பத்தில் ஏறி, முருகன் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். இவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்சரிவு: கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் சவரிக்காடு அருகே மண் சரிவால், 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடைவிடாது இடி, மின்னலுடன் பெய்த மழையினால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தது. கொட்டகை சரிந்து பெண் பலி: வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தில் கொட்டகை சரிந்து  லட்சுமி (50) இறந்தார்.Tags : paddy fields ,houses , 3.6 lakh acres of paddy fields submerged in continuous rains for the 5th day: 50,000 houses floating in water
× RELATED மழையால் நெற்பயிர்கள் பாதித்ததால்...