
சென்னை: தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் கோவிட் மையத்தை பார்வையிட்டார். தமிழகத்தில் இதுவரை 8,456 மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 435 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் 3,657 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதைப்போன்று பாதுகாப்பு மையங்களில் 4,799 முகாம்கள்நடத்தப்பட்டுள்ளது.
இந்த, முகாம்கள் மூலம் 2 லட்சத்து 953 பேருக்கு சோதனை செய்து எந்தவிதமான வேறு தொற்றுகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து நீரேற்று நிலையங்கள் குளோரினேசன் சரியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் குடிநீர் லாரிகள், குளோரினேசன் இல்லாமல் தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீர்தேங்கியுள்ள இடங்களில் கண்காணிக்கும் வகையில் கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். புரெவி புயல் காரணமாக நடமாடும் மருத்துவக்குழுகள், பறக்கும் படைகள், குளோரினேசன் குழுக்கள் போன்றவை தயார் நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு எந்த ஒரு கட்டணமும் வாங்காமல் வழங்கப்படும். குளோரிசன் 19,461 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.