×

மனம் விரும்பியும், பெற்றோர் சம்மதித்தும் பலனில்லை முஸ்லிம் வாலிபர்- இந்து பெண் திருமணத்தை நிறுத்திய போலீஸ்: உ.பி.யின் புதிய சட்டத்தால் அவலம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணத்துக்காக கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதை தடை செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், இருமனம் இணைந்த கலப்பு திருமணத்தையும் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  உத்தரப் பிரதேசத்தில் திருமணத்துக்காக கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதை தடுக்க, கடந்த வாரம் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒரு பெண்ணையோ, ஆணையோ கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், அந்த திருமணமும் ரத்து செய்யப்படும். இந்த சட்டம் அமலுக்கு வந்த மறுநாளே, இந்து பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்ய முயன்ற முஸ்லிம் வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த புதிய சட்டத்தின் கீழ் இந்து பெண்ணுடன் நடைபெற இருந்த முஸ்லிம் இளைஞரின் திருமணத்தை உத்தர பிரதேச போலீசார் நிறுத்தியுள்ளனர்.

லக்னோவின் தூடா காலனி பகுதியை சேர்ந்த முஸ்லிம் இளைஞருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு திருமணம் செய்ய, இருதரப்பு பெற்றோர்களும் சம்மதித்து பேசி முடித்தனர். கடந்த புதனன்று, இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற இருந்தது. இது பற்றி கேள்விப்பட்டதும் போலீசார் சென்று, அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக மணமக்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘நாங்கள் இரு குடும்பத்தினரும் சம்மதித்து தான் திருமணத்தை ஏற்பாடு செய்தோம். இருவரும் மதம் மாறவில்லை. இந்து, முஸ்லிம் சமுதாய முறைப்படி திருமணம் நடைபெற இருந்தது. யார் புகார் கொடுத்தார்கள் என தெரியவில்லை. மேலும், புதிய சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். ,” என்றனர்.

மதம் மாற மாட்டோம்
மணமகன் கூறுகையில், “நாங்கள் மதம் மாறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால், நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். எப்படி இருக்கிறோமோ அப்படியே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்கிறோம். எந்த அவசரமும் இல்லை. புதிய சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்து கொள்வோம்,” என்றார்.



Tags : Police boycott Hindu-Hindu woman marriage: UP's new law disgraceful
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...