×

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட அமைச்சருக்கு கொரோனா: மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்விக்குறி, பரபரப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை தன்னார்வலராக போட்டுக் கொண்ட அரியானா  மாநில சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி இறுதிக்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில், இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து, ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளன. இதை மனிதர்களிடம் செலுத்தி முதல் மற்றும் 2ம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இதன் இறுதி மற்றும் 3ம் கட்ட பரிசோதனை சமீபத்தில் தொடங்கியது. இந்த 3ம் கட்ட பரிசோதனையில், முதல் தன்னாவர்லராக அரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் (67) தனது பெயரை பதிவு செய்து, கடந்த மாதம் 20ம் தேதி முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் அமைச்சர் அனில் விஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  ‘எனக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார். இதனால், ஏற்கனவே தடுப்பூசியை போட்டுக் கொண்டவருக்கு கொரோனா தாக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு  பல்கலைக் கழகத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை போட்டுக் கொண்ட சென்னை தன்னார்வலர், தனக்கு கடுமையான பின்விளைவுகள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதை மத்திய அரசும், ஆக்ஸ்போர்டும் நிராகரித்தன. இந்நிலையில், அரியானா அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது, ‘கோவாக்சின்’ நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி இருக்கிறது. அரியானாவில் முதல்வர் கட்டார் தலைமையில் பாஜ ஆட்சிதான் நடக்கிறது என்பதால், அனில் விஜ்ஜின் அறிவிப்பு பின்னணியில் அரசியல் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு விளக்கம்
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனிதர்களுக்கு 2 முறை தடுப்பூசி போட்ட பிறகே, அவர்களின் உடம்பில் கொரோனாவை எதிர்ப்பதற்கான எதிர்ப்புசக்தி உருவாகும். அரியானா அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், அவருடைய உடலில் எதிர்ப்புசக்தி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை,’ என கூறப்பட்டுள்ளது.

2 டோஸ் போட்டால் மட்டுமே பலன்
* ஒரு மனிதருக்கு முதல் டோஸ், 2வது டோஸ் என 2 முறை கொரோனா தடுப்பூசி போடப்படும்.
* முதல் ேடாஸ் போடப்பட்ட நாளில் இருந்து 28 நாட்கள் கழித்தே 2வது டோஸ் தடுப்பூசி போடப்படும்.
* இந்த 2வது முறை தடுப்பூசி போடப்பட்ட பிறகே, உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
* அதற்கு இடைப்பட்ட நாட்களில் கொரோனா தொற்றில் இருந்து எந்த பாதுகாப்பும் கிடைக்காது.- அமைச்சர் அனில் விஜ்

Tags : Minister ,Corona ,India , Corona to minister vaccinated with covaxin made in India: Question about the reliability of the drug
× RELATED வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன்...