×

மேட்டூர் ஆர்டிஓ ஆபீசில் விஜிலென்ஸ் அதிரடி சோதனை: 1.89 லட்சம் பறிமுதல்

மேட்டூர்: மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத ₹1 லட்சத்து 89 ஆயிரத்து 200 கைப்பற்றப்பட்டது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பொறுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில், நேற்று பிற்பகல், திடீரென சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்தனர்.

அங்கிருந்த புரோக்கர்களை சுற்றிவளைத்து ஓரிடத்தில் அமர வைத்தனர். அப்போது, அங்கு சிதறிக்கிடந்த 22,700 ரூபாயை போலீசார் கைப்பற்றினர். மேலும், அலுவலக கோப்புகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணத்தையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ₹1 லட்சத்து 89 ஆயிரத்து 200 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர். அலுவலகத்திற்கு வெளியே  இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் முரளி ஆகியோரை உள்ளே அழைத்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். பணம் தொடர்பாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிடிபட்ட இடைத்தரகர்களில் சதீஷ் என்பவர், தம்மம்பட்டியைச் சேர்ந்தவர். இவர், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளியின் உறவினர் ஆவார். ஓமலூரைச் சேர்ந்த சரவணன் என்பவரும் பிடிபட்டுள்ளார்.


Tags : Vigilance raid ,office ,Mettur RTO , Vigilance raid at Mettur RTO office: 1.89 lakh seized
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...