3 ஆண்டுகளுக்கு மேலாக டிஎன்பிஎஸ்சியில் 11 இடங்கள் காலி: பதவிக்காக காத்திருந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள் அதிருப்தி

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் அதை எதிர்ப்பாத்துக் காத்துக்கொண்டிருந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள் அரசு மீது கரும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு கடந்த 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதிமுகவை சேர்ந்த 11 பேரை உறுப்பினர்களாக நியமனம் செய்தார். இதை எதிர்த்து திமுக, பாமகதொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுத்ததுடன் தகுதியான நபர்களை தேர்வு செய்யுமாறு 2017 ஜனவரியில் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டது.  இதையடுத்து, தலைவராக ஆணையத்தின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன், உறுப்பினர்களாக ராஜாராமன், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன், சுப்பையா, பாலுசாமி ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவர்களில் ராஜாராமன், பாலுசாமி ஆகியோர் ஓய்வு பெற்றனர்.

ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் என மொத்தம் 15 பேர் அங்கம் வகிக்க கூடிய டிஎன்பிஎஸ்சியில் தற்போது வெறும் 4 பேர் மட்டுமே உள்ளனர். அதாவது தலைவர், 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வக்கீல்கள் கடந்த 3 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என பல்வேறு தரப்புகள் மூலம் ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்காக அதிமுகவை சேர்ந்தவர்கள் அழுத்தம் கொடுத்தும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கு மேல் ஆணையத்தின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இதையடுத்து, வெளிப்படையாகவே அரசு மீது அவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி கிடைக்கும் என்பதற்காக கட்சி பதவிகளையும், வாரிய பதவிகளையும் ஒதுக்கிவைத்து விட்டு கடந்த 3 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களின் பைகள் மட்டும் நிரம்பினால் போதும் என்று நினைக்கும் அவர்கள் கட்சிக்காரர்களை கண்டுகொள்வதில்லை. உறுப்பினர்கள் நியமனம் செய்யாமல் இருப்பதால் அதிமுகவில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆணையத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

* ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் என  மொத்தம் 15 பேர் அங்கம் வகிக்க கூடிய டிஎன்பிஎஸ்சியில் தற்போது வெறும் 4  பேர் மட்டுமே உள்ளனர். அதாவது தலைவர், 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

* டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி  கிடைக்கும் என்று அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வக்கீல்கள் கடந்த 3  ஆண்டுகளாக காத்திருந்தனர்.

Related Stories: