வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை: ஆய்வின் மூலம் தகவல் அம்பலம்

* 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

* கடந்தாண்டு நவம்பர் மாதத்தை  ஒப்பிடுகையில் திருவள்ளூர், தர்மபுரி, திருச்சி, கரூர்,  மதுரை, சிவகங்கை, தேனி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 9  மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28ம் தேதி தொடங்கியது. கடந்த நவம்பர் மாதத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக மழை பெய்தது. ஆனால், தமிழகத்தில் 29 மாவட்டங்களில் சராசரி அளவை காட்டிலும் குறைவாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும அணை, ஏரிகளில் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை. அதே போன்று, நிலத்தடி நீர் மட்டமும் கடந்தாண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் இந்தாண்டு நவம்பரில் உயரவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது. இவ்வாறு கடந்த நவம்பர் மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழக முழுவதும் திருவள்ளூர், தர்மபுரி, திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை, தேனி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர்,கன்னியாகுமரி, தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31ம் தேதி வரை உள்ள நிலையில், மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: