×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவின் போராட்டம் தொடரும்: சேலம் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சேலம்:  மத்திய அரசின் புதிய வேளாண் சட்டதிருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் திமுகவின் இந்த போராட்டத்தை முடக்க, திட்டமிட்டு பல்வேறு முயற்சிகளை செய்துள்ளனர். எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆத்தூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், கொளத்தூர், ஓமலூர், அயோத்தியாப்பட்டணம் என்று பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினரை மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் சந்தித்த பிறகே, இங்கிருந்து செல்வேன். இந்த போராட்டம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கானது என்பதை, அதை தடுத்து நிறுத்தும் போலீசாரும் உணர வேண்டும். அவர்களும் விவசாயிகள் பயிரிடும் உணவைத்தான் சாப்பிடுகின்றனர். எடப்பாடி அரசு சொல்வதை எல்லாம் போலீஸ் கேட்கக்கூடாது.

விரைவில் ஆட்சி மாறும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, சேலத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இன்று கருப்புக்கொடி போராட்டம் நடக்கிறது. தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் நடக்கிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் என்று அனைத்து மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு போராட்டம் நடந்ததே இல்லை. அதிலும் விவசாயிகள் இப்படி போராடியதே இல்லை. குறிப்பாக பஞ்சாப் மாநில விவசாயிகள் இதில் காட்டும் தீவிரம் பெருமைக்குரியது. தமிழகத்திற்கும், பஞ்சாபிற்கும் நெருக்கமான போராட்ட வரலாறுகள் உள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த பெண் மத்திய அமைச்சர், இந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பதவியில் இருந்து விலகி உள்ளார். பாஜ கூட்டணியில் இருந்தும் வெளியேறி விட்டார்.

ஆனால் இதை எதிர்க்க திராணியில்லாத தமிழக முதல்வர் எடப்பாடி, இதற்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்த சட்டத்தில் எங்காவது ஓரிடத்தில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா, ஏழை தாயின் மகன் என்று கூறும் பிரதமர் மோடி, ஏழை விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுவதை கண்டுகொள்ளாதது ஏன்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர். வேளாண் சட்டதிருத்தத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதனால்தான் வீதிக்கு வந்து போராடுகின்றனர். கம்பெனியோடு ஒப்பந்தம் போட்டு வியாபாரம் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறும் போது நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. இது, விவசாயி என்று கூறி தம்பட்டம் அடிக்கும் பச்சை துண்டு பழனிசாமிக்கு தெரியாது.

ஏனென்றால் அவர் விவசாயி அல்ல, வேடதாரி. விவசாயிகள் விரும்பியவருக்கு விற்கலாம் என்கிறார்கள். ஆனால் என்ன விலைக்கு விற்கலாம் என்று கூறவில்லை. 95 சதவீத நடுத்தர விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்திற்கு எடப்பாடி ஆதரவு தெரிவித்து துரோகம் இழைக்கிறார். இதுகுறித்து கேள்வி கேட்டால் போராட்டத்தை தூண்டி விடுவதாக கூறி, ஊழல் குறித்து பேசுகிறார். இதுகுறித்து ஆ.ராசா கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் சொல்லும் ஆண்மை அவருக்கில்லை. விவசாயிகளுக்கு செய்த பாவத்தை போக்க, சட்டமன்றத்தில் இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி பரிகாரம் செய்தால் அவர் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் டேஸ்..டேஸ்.. ஏழைதாயின் மகன் என்று கூறும் மோடியும் ஜனநாயகத்தை மதித்து போராடும் விவசாயிகளை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளுக்கான போராட்டத்தில் தொடர்ந்து திமுக ஈடுபடும். இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : DMK ,Delhi ,protests ,Salem ,MK Stalin , DMK will continue to fight in support of struggling farmers in Delhi: MK Stalin warns of Salem protests
× RELATED திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக்...