×

தமிழகத்தில் தொடர் மழை 12,000 மெகாவாட்டாக சரிந்தது மின்தேவை

* நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழகத்தில் மின்தேவை 14,800 மெகாவாட்டுக்கு மேல் இருந்தது.
* தற்போது மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்து உள்ளது.

சென்னை: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக மின்தேவையின் அளவு 12,000 மெகாவாட் டாக சரிந்துள்ளது. இதற்கு வீடுகளில் மின்சாதனங்களில் பயன்பாடு குறைந்திருப்பதே காரணமாகும். தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழகத்தில் மின்தேவை 14,000 மெகாவாட்டுக்கு மேல் இருந்தது. அதன்பிறகு படிப்படியாக மழை பெய்ய துவங்கியது. அதன்பிறகு நிவர் புயல் உருவானது. இது சென்னைக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது ஒரு வாரத்திற்கும் மேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்பும் உள்ளிட்ட இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்தது. இதனைத்தொடர்ந்து புரேவி புயல் உருவானது. இப்புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் விழுப்பும், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நாகை என பெரும்பாலான மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும் இந்த மழையானது ெதாடர்ந்து நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காணப்படுகின்றன. இரவில் நிலைமை மேலும் மோசமாக இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் அதிகப்படியான குளிர் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே வீடுகளில் மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, ஏசி போன்றவற்றை பயன்படுத்துவது குறைந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையும் 2,500 மெகாவாட்டுக்கு மேல் சரிந்துள்ளது. அதாவது கடந்த நவம்பர் 4ம் தேதி தமிழகம் முழுவதும் தேவைப்படும் ஒட்டுமொத்த மின்தேவையின் அளவு 14,800 மெகாவாட்டாக இருந்தது. இதுவே நேற்று முன்தினம் (டிசம்பர் 4ம் தேதி) தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 12,059 மெகாவாட்டாக குறைந்துள்ளது. தொடர்ந்து மழை, குளிர் அதிகரிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவையில் மேலும் சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.


Tags : Tamil Nadu , In Tamil Nadu, continuous rainfall fell to 12,000 MW
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...