விவசாயிகள் போராட்டம்: 5ம் சுற்று பேச்சும்தோல்வி

புதுடெல்லி: விவசாயிகளுடன் நேற்று நடந்த 5ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததால், வரும் 9ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட 4 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, உணவு துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் நேற்று மீண்டும் விவசாயிகளுடன் 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், மத்திய அரசு தரப்பில் பல எழுத்து பூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியுமா? இல்லையா? என்று கூறுங்கள். இல்லையெனில், தாங்கள் வெளிநடப்பு செய்வதாக கூறி அவர்கள் வெளியேற முற்பட்டனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர்கள், இது குறித்த உறுதியான திட்டத்தை தயாரிக்க அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறிய அமைச்சர்கள், வரும் 9ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வைத்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதற்கு விவசாயிகளும் சம்மதித்தனர். இதையடுத்து, எந்த முடிவும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

Related Stories:

>