×

அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை துணைவேந்தர் சூரப்பாவுக்கு கமல்ஹாசன் திடீர் ஆதரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை தொடர்பாக துணைவேந்தர் சூரப்பாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, இதற்கு தகுதியானவர் தமிழ்நாட்டில் இல்லையா என்று நாம்தான் கேள்வி எழுப்பினோம். அந்தக் கேள்வி இப்ேபாதும் தொக்கி நிற்கிறது. அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால், வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்துக்கு முன் நெளிந்து குனியாதவர். தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல்திலகங்கள்? வளைந்து கொடுக்கவில்லை என்றால் ஒடிப்பதுதானே இவர்கள் பழக்கம்.  

முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா? உயர்கல்வித்துறை அமைச்சர் 50 லட்சம் வாங்கிக்கொண்டுதான் பணி நியமனம் செய்கிறார் என்று, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி குற்றம் சாட்டினாரே. அதை விசாரித்து விட்டீர்களா? உள்ளாட்சித்துறை, கால்நடைத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, பால்வளத்துறை என அத்தனை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர்களும், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே, விசாரித்து விட்டீர்களா?  சூரப்பாவின் கொள்கைச்சார்புகள், அரசியல் நிலைப்பாடுகளில் நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால், ஒருவர் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்.

சகாயம் தொடங்கி சந்தோஷ் பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரியது.  இதை இனிமேலும் தொடரவிடக் கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் உருவாகக் கூடாது. நேர்மைக்கும், ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்க விரும்புபவர்கள், தங்கள் மவுனம் கலைத்துப் பேசியாக வேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாற வேண்டும். நேர்மைதான் நம் ஒரே சொத்து. அதையும் விற்று வாயில் போடத் துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட, ஓட விரட்ட வேண்டும்.

Tags : Kamal Haasan ,Surappa ,Anna University , Kamal Haasan's abrupt support for Anna University controversy vice-chancellor Surappa
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...