×

மழைநீரை வெளியேற்றிய போது மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலி: புளியந்தோப்பில் பரிதாபம்

சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரம் அம்பேத்கர் கல்லூரி சாலையில் சஞ்சய் ஜெயின் (55) என்பவர் இரும்பு கம்பி வேலி தயாரிக்கும் கம்பெனி மற்றும் குடோன் வைத்துள்ளார். கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சஞ்சய் ஜெயின் கம்பெனி உள்ள இடம் முழுவதும் சுமார் 3 அடி தண்ணீர் தேங்கியது. நேற்று காலை, மின் மோட்டார் மூலம் இதை அகற்றும் பணியில், கம்பெனி ஊழியர்கள்  வியாசர்பாடி மூர்த்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் (48), புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த மோகன் (68) ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து இறந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளியந்தோப்பு பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மின்வயரை மிதித்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இரண்டு மாதத்திற்குள் புளியந்தோப்பு பகுதியில் மேலும் 2 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு சம்பவம்:  அண்ணா நகரை சேர்ந்த நளினி ராணி (56), நேற்று முன்தினம் இரவு வீட்டில் துணி அயன் செய்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



Tags : 2 employees killed when electricity flowed out of rainwater: Awful in Puliyanthope
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...