போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயிகளின் ஆற்றலும், உறுதியும் இந்தியாவின் பெண்ணியத்தின் ஒரு அம்சமாகும்: விவசாயிகளை ஆதரிக்க ராகுல் கோரிக்கை

டெல்லி: நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்றுடன் 10வது நாளாக போராட்டம் நடப்பதால் டெல்லியில் பதற்றம் நீடிக்கிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த 26ம் தேதி முதல் இன்று 10ம் நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த சில நாட்களாக மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று தமிழகத்தில் திமுக சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளை ஆதரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுல டிவிட்டர் பதிவில்; புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் மத்திய அரசின் அடக்குமுறைகளை உறுதியாக எதிர்கொள்கின்றனர்.

இத்தகைய சூழலில் நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயிகளின் ஆற்றலும், உறுதியும் இந்தியாவின் பெண்ணியத்தின் ஒரு அம்சமாகும். அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இணைந்த சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: