விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5-ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: திட்டமிட்டபடி 8-ம் தேதி பாரத் பந்த்.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5-ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. அடுத்தகட்டமாக 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றுடன் 10வது நாளாக போராட்டம் நடப்பதால் டெல்லியில் பதற்றம் நீடிக்கிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த 26ம் தேதி முதல் இன்று 10ம் நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1ம் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

மத்திய அரசின் தரப்பில் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நேற்று முன்தினம் மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். எனினும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.  இந்நிலையில், எனவே இன்று (சனிக்கிழமை) மீண்டும் 5ம் கட்டமாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மீண்டும் பேச்சுவார்த்தை தோல்வி

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் நடத்திய 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. கூடுதலாக உறுதிமொழிகளை வழங்க மத்திய அரசு விவசாயிகளிடம் கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திட்டமிட்டபடி பாரத் பந்த்..!

பின்னர் விவசாய குழுக்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகெய்ட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அரசு ஒரு திட்டத்தை தயாரித்து எங்களிடம் கொடுக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என கூறினோம். அரசு கோரிக்கையை ஏற்காத நிலையில் திட்டமிட்டபடி 8-ம் தேதி பாரத் பந்த் நடைபெறும் என கூறினார்.

பேசித்தீர்க்க அரசு தயார்..!

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து வேளாண்துறை அமைச்சர்பேசிய; விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் பேசித்தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது; தயவு கூர்ந்து மூத்த விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும், அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதை சந்தேகிப்பது ஆதாரமற்றது, யாராவது சந்தேகப்பட்டால், அதைத் தீர்க்க அரசாங்கம் தயாராக உள்ளது என கூறினார்.

Related Stories: