தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த காரியத்திலும் சரியில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

ஊட்டி: தமிழகஅரசின் செயல்பாடுகள் எந்த காரியத்திலும் சரியில்லை என ஊட்டியில் கனிமொழி எம்.பி. கூறினார். திமுக. மகளிர் அணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். குன்னூர், அருவங்காடு பகுதியில் திமுக.,வினரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, எல்லநள்ளி அருகேயுள்ள அரக்காடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்கள்அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஊட்டியில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கனிமொழி பேசுகையில், செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி வந்தவுடன், காய்கறி பதப்படுத்தும் அறைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவக்கல்லூரி விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெலிகாப்டர் ஆம்புலென்ஸ் சேவை குறித்தும் கண்டிப்பாக திமுக., தலைவர் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும். சுற்றுலா தொழில் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது: தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உயர் கல்வி படிக்க மாணவர்கள் வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்காக எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் புயல் நிவாரண பணிகளில் மட்டுமில்லை. எந்த ஒரு காரியத்திலும் செயல்பாடுகள் சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மக்கள் திமுக., ஆட்சி வர வேண்டும் என நினைக்கிறார்கள். கட்டாயம் திமுக., ஆட்சி அமையும், என்றார்.

முன்னதாக நீலகிரி அவரை மாவட்ட செயலாளர் முபாரக், தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமசந்திரன், கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories: