×

எதிர்க்கட்சிகள் மீது அவதூறு பேசுவதை விடுத்து மத்திய குழுவிடம் நிலவரத்தை எடுத்துகூறி நிவாரண உதவியைப் பெற்றிடுக: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: எதிர்க்கட்சிகள் மீது தேவையற்ற அவதூறுகளைப் பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், புயல் பாதிப்புகள் குறித்து நேரடி ஆய்வு செய்ய வருகை தந்துள்ள மத்திய குழுவினரிடம் முழு நிலவரத்தையும் எடுத்துச் சொல்லி, தேவையான நிவாரண உதவியைப் பெற்றிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நிவர் புயலைத் தொடர்ந்து புரெவி புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி இருக்கிறது.

சென்னையையும் அதனைச் சுற்றியும் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், நீர்த்தேக்கங்களின் கொள்ளளவைக் கருத்திற்கொண்டு திறந்துவிடப்படும் நீரின் அளவும் கரையோர மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாகத் தொடர் மழையும், மின்வெட்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மீண்டும் மழை - வெள்ள பாதிப்பினால் மக்கள் அவதிப்படுகிறார்கள். சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு, கடலூர் மாவட்டத்தில் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறேன். நாளை திருவாரூர் - நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கவிருக்கிறேன்.

சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. சிதம்பரம் - சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் - குடிசைப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் ஏழை மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் நீரில் வீணாகிவிட்டதை வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சரியாகத் தூர்வாரப்படாத நீர்வழித் தடங்கள், நீர்நிலைகள், சீரமைக்கப்படாத மழைநீர் வடிகால் கால்வாய்கள் இவற்றால், பல இன்னல்கள் ஏற்பட்டிருக்கின்றன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் ஓயாமல் பெய்து வரும் மழையால், 1000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் நெற்பயிர்கள் மூழ்கி வீணாகியுள்ளன. இயற்கைச் சீற்றம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உணர்ந்து - போர்க்கால அடிப்படையில் மாநில அரசு நிவாரண நடவடிக்கையை மேற்கொண்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். எதிர்க்கட்சிகள் மீது தேவையற்ற அவதூறுகளைப் பேசுவதைத் தவிர்த்து, ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நேரடி ஆய்வு செய்ய வருகை தந்துள்ள மத்திய குழுவினரிடம் முழு நிலவரத்தையும் எடுத்துச் சொல்லி, தேவையான நிவாரண உதவியைப் பெற்றிட வேண்டும்.

என்றென்றும் மக்கள் பணியினை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அனைவரும் புயல் - மழை - வெள்ள பாதிப்புகளால் துயர்ப்படும் மக்களுக்கு உணவு - உடை - பாதுகாப்பான இடம் - மருத்துவ வசதி போன்றவற்றை வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Central Committee ,MK Stalin , Stop slandering the opposition and take the situation to the Central Committee and seek relief: MK Stalin's statement
× RELATED தரமற்ற பணியால் பொதுமக்கள் எதிர்ப்பு