2016-19 ஆண்டுகளில் TNPSC குரூப் 1 தேர்வில் 20% தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: TNPSC தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார்? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது. 20% இடஒதுக்கீடு மசோதா ஆளுநரிடம் 8 மாதங்களாக காத்திருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்த நிலையில் ஆளுநரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் நான் பங்கேற்றதாகவும், அதில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தேன். ஆனால் இறுதி தேர்வுக்கு என்னை அழைக்கவில்லை.

மேலும் நான் முற்றிலும் தமிழ் வழியில் பயின்றுள்ளதால் 20% இடஒதுக்கீடு குரூப்-1 தேர்வுக்கு உள்ளது. அதில் இடம் கிடைக்கும் என்று காத்திருந்தேன்; ஆனால் அதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்த போது, 20% இடஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகளுடன் பலர் தமிழ் வழியில் பயிலாமல் அந்த இடஒதுக்கீட்டை பயன்படுத்தியதாக தெரிய வந்தது. எனவே இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தனக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி 2016 முதல் 2019 வரை தமிழ் வழியில் பயின்று 20% இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை கேட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் அரசு தரப்பில் அந்த பட்டியல் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 4 வருட காலங்களில் சுமார் 85 நபர்கள் குரூப்-1 தமிழ் வழியில் பயின்று 20% இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தமிழக அரசு சார்பாக இது குறித்த திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக 8 மாத காலமாக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த 85 நபர்கள் யார்? அவர்கள் எந்த கல்லூரியில் பயின்றனர்? அவர்கள் முற்றிலும் தமிழ் வழியில் பயின்றுள்ளார்களா? என பல்வேறு கேள்விகள் எழுப்பி தேர்வு செய்யப்பவர்களின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதுமட்டுமின்றி ஆளுநரின் செய்யலாளரையும் இந்த  வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து திருத்த சட்ட மசோதாவின் நிலை என்ன? அது எப்போது சட்டமாக இயற்றப்படும்? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிச.9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related Stories: