குடிமராமத்து பணி நடந்த 2 மாதத்தில் நிலையூர் கண்மாய் கரை உடைப்பு-ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்

திருப்பரங்குன்றம் : குடிமராமத்து பணி நடந்த 2 மாதத்திலே நிலையூர் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதே காரணமென விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் பெரிய கண்மாய். சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் மூலம் இப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சுமார் 3 கிமீ நீளமுள்ள இக்கண்மாய் கரையை பலப்படுத்த இரண்டு கட்டமாக குடிமராமத்து பணிகள் நடைபெற்றன.

இதில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு முன்பு ரூ.90 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நடந்து 2 மாதங்களே ஆன நிலையில் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தொடர்மழை காரணமாக வைகை உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், இன்னும் ஒரு சில நாட்களில் கண்மாய் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

மேலும் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தின் அருகில் ஏற்கனவே நீர் கசிவு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடைப்பை உடனடியாக சரி செய்யாவிட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி மக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘குடிமராமத்து பணிகளை ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மேற்கொண்டதால் பெரிய அளவில் முறைகேடு செய்துள்ளனர். கண்மாயில் அள்ளிய மண்ணை பெருமளவு வெளியில் விற்பனை செய்து விட்டு, குறைந்தளவு மண்ணை கொண்டு மட்டுமே கரையை பலப்படுத்தியுள்ளனர். அதனால்தான் சிறு மழைக்கே கரை சேதமடைந்து விட்டது. எனவே அதிகாரிகள் உடனே கண்மாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: