பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 6 ஏரிகள் நிரம்பின

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 6 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் 5 ஏரிகள் 90 சதவீதம் நிரம்பின.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் மேற்கு, வடமேற்கு எல்லைகளாக விளங்கும் பச்சைமலை தொடர்ச்சியில் இருந்து உற்பத்தியாகும் கல்லாற்று நீர்வரத்து காரணமாக நடப்பாண்டுக்கு கடந்த மாதம் 18ம் தேதி மாவட்டத்தில் முதல்முறையாக அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது.

பின்னர் புரெவி புயல் காரணமாக பெய்த தொடர்மழைக்கு 2ம் தேதி முதல் அரும்பாவூர் சித்தேரி, 3ம் தேதி வடக்கலூர் ஏரி நிரம்பி வழிய தொடங்கியது.  3ம் தேதி நள்ளிரவு முதல் கீழப்பெரம்பலூர் ஏரி, 4ம் தேதி முதல் கீரனூர், பெண்ணக்கோணம் ஏரிகளும் என நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 6 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

பாண்டகப்பாடி ஏரி, பேரையூர் ஏரி, நெற்குணம் ஏரி, அகரம்சீகூர் ஏரி, வயலூர் ஏரி ஆகிய 5 ஏரிகள் 81- 90 சதவீதம் நிரம்பியுள்ளது. வடக்கலூர் அக்ரஹாரம் ஏரி 71- 80 சதவீதம் நிரம்பியது. எழுமூர் ஏரி, ஆய்குடி ஏரி, ஒகளூர் ஏரிகள் 51-70 சதவீதம் நிரம்பியுள்ளன. காரியானூர் ஏரி, பெரம்பலூர் சின்ன ஏரி, கை.களத்தூர் ஏரி, வெண்பாவூர் ஏரி, பிள்ளங்குளம் ஏரி, கை.பெரம்பலூர் ஏரி, கிழுமத்தூர் ஏரி ஆகிய 7 ஏரிகள் 26- 50 சதவீதம் நிரம்பியுள்ளன.

துறைமங்கலம் பெரியஏரி, லாடபுரம் பெரியஏரி, ஆண்டிக்குரும்பலூர் ஏரி, பெருமத்தூர் ஏரி, தொண்டமாந்துறை ஏரி, பூலாம்பாடி பொன்னேரி, பூலாம்பாடி சின்ன ஏரி, திருவாளந்துறை ஏரி, அன்னமங்கலம் ஏரி, மேலப்புலியூர் உள்ளிட்ட 51 ஏரிகள் 1 முதல் 25 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. புரெவி புயல் காரணமாக இன்னும் சில ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: