வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியும் பயனில்லை ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும்- பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை : வெள்ளநீர் பெருக்கெடுத்தும் ஓடியும் பயனில்லை. அனைத்தும் கடலில் கலப்பதால் ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டுமென பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புரெவி புயல் எதிரொலியாக பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் ஓடக்கூடிய மஹாராஜசமுத்திரம், அக்னி, நசுவினி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வறண்ட ஆறுகளுக்குள் ஆங்காங்கே கிடந்த மரங்கள்கூட இந்த மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் பள்ளத்தூர் கூத்தலிங்கம், செருவாவிடுதி இளங்கோவன், காயாவூர் முத்துராஜ் ஆகியோர் கூறுகையில், காட்டாறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. குறிப்பாக மஹாராஜசமுத்திரம், நசுவினி, அக்னி உள்ளிட்ட ஆறுகள் தண்ணீரின்றி இருந்தது. புரெவி புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக இந்த பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வளவு பெரிய மழை வெள்ளத்தை பார்த்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கஜா புயலின்போது வேரோடு சாய்ந்துபோன தென்னை உள்ளிட்ட மரங்கள் அந்தந்த பகுதிகளில் குவிந்து கிடந்தது. பல மரங்கள் இதுபோன்ற வறண்டு கிடந்த ஆறுகளுக்குள்ளும் ஆங்காங்கே கிடந்தது. குவிந்து கிடந்த மரங்கள் அனைத்தும் தற்போது இந்த மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

ஒருபுறம் ஆறுகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் இந்த ஆறுகளில் ஓடக்கூடிய வெள்ளநீர் வீணாக கடலில் தான் கலக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. எனவே இந்த பகுதிகளில் தடுப்பணைகள் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தடுப்பணைகள் இருந்தால் இதுபோன்ற வெள்ள காலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து அதன்மூலம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு விவசாயி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறார். அப்படிப்பட்ட முதல்வருக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியாதா. எனவே இனிமேலாவது விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து வீணாக கடலுக்கு செல்லக்கூடிய தண்ணீரை தேக்கி வைப்பதற்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி கொடுக்க வேண்டும்.

தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்கி வைக்கும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவர். எனவே தமிழக முதல்வர் இனிமேலாவது தான் ஒரு விவசாயி என்று சொல்வதற்கு இணங்க செயலில் செய்து காண்பித்து இந்த பகுதியில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: