கொல்லிமலையில் கனமழை மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சேந்தமங்கலம் : புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், கொல்லிமலை மலைப்பாதையின் 56 கொண்டைஊசி வளைவில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.புரெவி புயல் காரணமாக, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள காட்டாறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை மற்றும் கடும் குளிர் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கொல்லிமலையில் வசிக்கும் மக்கள், வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மழை மற்றும் சூறைக்காற்றினால் வனப்பகுதியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம், மழையின் போது கொல்லிமலை மலைப்பாதையில் 56வது கொண்டை ஊசி வளைவில், மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலையில் கடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் மலைப்பாதையில், சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: