3வது நாளாக கனமழை அரசு மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது

திருவாரூர் : திருவாரூரில் நேற்றும் 3 வது நாளாக பெய்த கனமழை காரணமாக விஜயபுரம் அரசு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் மழை நீரானது குளம்போல் தேங்கியது.புரெவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக அடைமழை பெய்து வருகிறது. அதன்படி திருவாரூர் நகரிலும் இந்த மழையானது பெய்து வரும் நிலையில் நேற்று 3வது நாளாக திருவாரூரில் மட்டும் 140 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதனையடுத்து நகரில் பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி ,நேதாஜி சாலை ,கமலாலயம் வடகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் நகரில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்காக இயங்கிவரும் விஜயபுரம் தாய்-சேய் நல மருத்துவமனையை சுற்றி இந்த மழை நீரானது வெள்ளம்போல் தேங்கியதால் இந்த மருத்துவமனைக்கு நேற்று கர்ப்பிணி பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கமிஷனர் (பொ) முத்துக்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இந்த மருத்துவமனையைச் சுற்றி தேங்கியிருந்த மழை நீரை மோட்டார் பம்பு கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த மருத்துவமனை அருகில் இருந்து வரும் வடிகால், வாய்க்கால் மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீரானது செல்ல முடியாமல் இந்த மருத்துவமனையில் குளம் போல் தேங்கி வருவதால் இந்த மருத்துவமனையை ஒட்டியவாறு இருந்து வரும் பாசன வாய்க்கால் மற்றும் குளத்தில் இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பட்சத்தில் இதுபோன்ற மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்காமல் பாதுகாக்கலாம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: