தொடர் தடையால் மீன்வரத்து இல்லை கருவாடுக்கு மாறும் அசைவ பிரியர்கள்-விலை மலிவால் விற்பனை நான்குமடங்கு அதிகரிப்பு

சாயல்குடி : கொரோனா, மீன்பிடி தடை, புயல் என அடுத்தடுத்து தடைகள் வருவதால் மீன் வரத்து குறைந்துவிட்டது. இதனால் கருவாடை அசைவ பிரியர்கள் நாடிச்செல்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக  மார்ச் 22ம் தேதி முதல் சுமார் 5 மாதங்கள் வரை தளர்வுகள் இன்றி ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

6வது முறை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு  ஜூலை மாதம் கடலுக்குச் சென்றனர். ஆனால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பருவமழை துவங்கியதால் மீன்பிடியில் தடை ஏற்பட்டது.

 பிறகு கடந்த நவம்பர் மாதம் கனமழை, நிவர் புயல் காரணமாக  மீன்பிடி மீண்டும் தடைபட்டது. இந்நிலையில் தற்போது டிசம்பர் 1ம் தேதி முதல் புரெவி புயல், அதனை தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும், மழை, பலத்த காற்று வீசி வருவதாலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் மீன்பிடி தடைபட்டுள்ளது.

 இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் மாவட்டத்தில் மீன்வரத்து முடங்கியுள்ளதால், அசைவ பிரியர்கள் கருவாடு வாங்கி சமைத்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இது குறித்து கடலாடி, சாயல்குடி பகுதியினர் கூறும்போது, தற்போது மலிவு விலை மீனான சூடை முதல் விலை அதிகமாக இருக்கும் இறால், சீலா மீன் வரை அதிக வரத்து வரக்கூடிய சீசன். இதனால் இம்மாதங்களில் விரும்பிய மீன்களை வாங்கி சாப்பிடலாம். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை மீன்பிடி தொழிலுக்கு தொடர் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது.

இதனால் மலிவு விலைக்கு கிடைக்கின்ற கருவாடு வாங்கி வாரத்தில் 2 நாட்கள் சமைத்து சாப்பிடுகிறோம். ரூ.20க்கு வாங்கும் காய்கறி அளவிற்கு சமமாக, ரூ.5 செலவிலான மதிப்பீட்டில் 2 துண்டு கருவாடு எடுத்து குழம்பு வைத்து சமைத்து ஒரு குடும்பமே சாப்பிட்டுவிடலாம் என்ற நிலை உள்ளது என்றனர்.  

சாயல்குடி கருவாடு வியாபாரி ஒருவர் கூறும்போது, தொடர் தடையால் மீன்வரத்து இல்லை. இதனால்  மலிவு விலை கருவாடுகள் நான்கு மடங்கு விற்பனையாகிறது. கிலோ ஒன்றிற்கு ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்படுகின்ற காரா, நகரை, சின்ன ஊழி கருவாடுகள்.  ரூ.200 முதல் விற்கப்படுகின்ற நெத்திலி கருவாடுகள் அதிகமாக விற்பனையாகிறது.

விலை அதிகம் வாளை, சீலா, கனவாய் போன்ற மீன்களுக்கு தற்போது தான் சீசன், ஆனால் வரத்து இல்லை. இதனால் விலை உயர்ந்த கருவாடு விற்பனை மந்தமாக உள்ளது என்றார்.

Related Stories: