மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் பரிதாப நிலையில் பால்கட்டளை குளம்

நெல்லை : நெல்லை அருகே பால்கட்டளை குளம் சுற்றுச்சுவர் உடைந்து பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது. குளத்தை ஒட்டி காணப்படும் மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன.நெல்லையில் இருந்து தாழையூத்து செல்லும் மெயின் ரோட்டில் கரையிருப்பு எதிர்பகுதியில் பால்கட்டளை குளம் உள்ளது. இதையொட்டி காணப்படும் பால்கட்டளை கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பால்கட்டளை கிராமத்தில் வசிப்பவர்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பால்கட்டளை குளத்தில் காணப்படும் தண்ணீரை கொண்டே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

ராமையன்பட்டி அருகேயுள்ள சத்திரம் புதுக்குளம் நிரம்பி பால்கட்டளை குளத்திற்கு தண்ணீர் வருகிறது. தற்போது பெய்த மழையால் பால்கட்டளை குளம் நிரம்பி காணப்படுகிறது. இதனால் சாலையை ஒட்டி காணப்படும் குளக்கரை சுவர்கள் அனைத்தும் உடைந்து விழுந்துள்ளன. குளக்கரையை செம்மைப்படுத்த பொதுமக்கள் மணல் மூடைகளை அடுக்கி, கரையை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் சாலையில் வேகமாக செல்வோர் குளத்தில் விழும் அபாயங்களும் உள்ளன.

குளத்தின் சுற்றுச்சுவர் பரிதாபமாக காணப்படுவதால், கிராம மக்கள் அச்சத்தோடு நடமாடுகின்றனர். மேலும் கிராமத்திற்கு செல்லும் அனைத்து மின் கம்பங்களும் எந்நேரமும் விழலாம் என்ற நிலையில் காணப்படுகின்றன. சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்கள் குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே கிராம மக்களின் நலன் கருதி பால்கட்டளை குளத்தின் கரைகளை செம்மைப்படுத்தி, அங்குள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்க்க உள்ளது.

Related Stories: