30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தென்காசி கோட்டாட்சியர் அலுவலகம் இடமாற்றம்

தென்காசி : முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகம் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரயில் நகர் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்ட போதே தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால்  33 ஆண்டுகால தாமதத்திற்கு பிறகு தற்போது புதிய மாவட்டம் உருவாகி உள்ளது.

மாவட்டம் உருவாவதற்கு காலதாமதம் ஆனாலும் அன்றைய காலகட்டத்தில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 19.10.1986ம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் தலைமையில் சபாநாயகர் பி.எச். பாண்டியன், நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலையில் தென்காசி வருவாய் கோட்டம் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் துவக்கப்பட்டது.

  பின்னர் 1989ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 22. 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்காசி வருவாய் கோட்டத்தில் துவக்கத்தில் 8 தாலுகாக்கள் இருந்தபோதும் சங்கரன்கோவில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், வி.கே.புதூர் ஆகிய 5 தாலுகாக்களை உள்ளடக்கிய கோட்டமாக தென்காசி கோட்டாட்சியர் அலுவலகம் திகழ்கிறது.

 கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயங்கி வந்த கோட்டாட்சியர் அலுவலகம் தற்போது ரயில் நகரில் 5 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கட்டிடத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் உள்ள 3 பெரிய அரங்குகளில் முதலாவது அரங்கில் நான்கு அறைகள் மட்டும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்காசிக்கு புதிய நிரந்தர கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் இன்னும் அதிகாரபூர்வமாக நடைபெறாத நிலையில் பதிவுத்துறை அலுவலக கட்டிடத்தில் கலெக்டர், பிஆர்ஓ உள்ளிட்டோரும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட மாடி கட்டிடத்தில் 9 துணை ஆட்சியர் அலுவலகங்களும் அமைந்துள்ளது.

 கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் சமூக இடைவெளியின்றி போதுமான இடவசதியும் இல்லாமல் இயங்கி வந்த நிலையில், தற்போது கோட்டாட்சியர் அலுவலகம் ரயில் நகரில் 5 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டுவந்த கோட்டாட்சியர் அலுவலக தரைதளத்தில் தேர்தல் பிரிவு அமைகிறது. இதுதவிர ரயில் நகரில் உள்ள கட்டிடத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் விரைவில் செயல்பட விருக்கிறது.

ரயில் நகர் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் இத்துடன் சேர்த்து மொத்தம் நான்கு தனித்தனி இடங்களில் கலெக்டர் அலுவலகம் சார்ந்த அதிகாரிகளும், பணியாளர்களும் பணிபுரிந்து வருவதுடன் எளிதில் வந்து செல்லும் வகையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. புதிய கலெக்டர் அலுவலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 119 கோடி ரூபாய் செலவில் பணிகள் துவங்கினாலும், நிறைவடைவதற்கு சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கும் தனித்தனி கட்டிடங்களில் தான் பணிபுரிய வேண்டிய சூழல் கலெக்டர் அலுவலகம் சார்ந்த பணியாளர்களுக்கு உள்ளது.

Related Stories: