×

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல் எதிர்ப்பு

சென்னை: அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூரப்பாவின் கொள்கைச்சார்புகள், அரசியல் நிலைப்பாடுகளில் நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவரது அடையாளத்தை அளிக்க மறுப்பதா என வீடியோவில் கமல்ஹாசன் பேசியுள்ளார். ஊழல்வாதிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் எனவும் வீடியோ பதிவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக திரு.சூரப்பா நியமிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா எனும் கேள்வியை நாம் தான் எழுப்பினோம். அந்த கேள்வி இப்பொழுதும் தொக்கி நிற்கிறது. அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஆனால் வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்திற்கு முன் நெளிந்து குழையாதவர். தமிழக பொறியியல் கல்வியை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்று முயன்றவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள். வளைந்து கொடுக்கவில்லை என்றால் ஒடிப்பது தானே இவர்கள் வழக்கம். எவனோ அடையாளத்தை மறைத்து கொண்டு எழுதிய மொட்டை கடிதத்தின் அடிப்படையில் விசாரணை குழு அமைத்திருக்கிறார்கள்.

உயர்கல்வித்துறை அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டு தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டை விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நலவாழ்வுத்துறை, பால்வளத்துறை என அத்தனை துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர்களும், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே. அதை விசாரித்து விட்டீர்களா? தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை, கரைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்? எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Anna University ,Surappa ,commission ,Kamal , Surappa, Kamal, Anna University
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!