விவசாயிகளுடன் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் பிரதமர் மோடி இல்லத்தில் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர். விவசாயிகளுடன் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் சென்றுள்ளனர். அமித்ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பிரதமர் இல்லத்தில் ஆலோசனை நடத்துகின்றனர்.

விவசாயிகள் மற்றும் மத்திய அரசுடனான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சலோ என்ற பெயரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ள நிலையில் தலைநகரே கடந்த 10நாட்களாக ஸ்தம்பித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. டிசம்பர் 1ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.

35 விவசாயச் சங்க பிரதிநிதிகளுடன் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

7 மணி நேரம் நீடித்த 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களில் எட்டு திருத்தங்களை பரிசீலிக்க மத்திய அமைச்சர்கள் முன்வந்த போதிலும், மூன்று சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் சங்க தலைவர்கள் தொடர்ந்து உறுதியாக இருந்தனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மிகச் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. பல விவகாரங்களை வெளிப்படையாக விவசாயச் சங்க பிரதிநிதிகள் பேசினார்கள். வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அது பற்றி விவசாயிகளுக்கு நாங்கள் உறுதி அளிப்போம். தொடர்ந்து விவசாயிகளிடம் பேசுவோம். அதற்கு முன்பாக அவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதேபோன்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல விவகாரங்களில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அரசு தீர்வு கொடுக்கவில்லை. எங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து 10வது நாளாக இன்று விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. அதேநேரம் தமிழக எதிர்க்கட்சிகள், மேற்கு வங்க முதல்வர் எனப் பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்.

Related Stories: