×

வந்துவிட்டது நேப்கின் டிஸ்ட்ராயர்!

நன்றி குங்குமம் தோழி

அருணாச்சல முருகானந்தம்‘ பெயரைச் சொன்னாலே குறைந்த விலையில் நேப்கின் உருவாக்கியவர் எனச் சொல்லி விடுவோம். அந்த அளவிற்கு ‘பேட்மேன்‘ பிரபலம். அதே நிதிஷ் N R யாரென தெரியுமா? இவர்தான் நேப்கினை அழிப்பவர். ஆம். இவருடைய நேப்கின் அழிக்கும் மெஷின்தான் இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்போது பிரபலமாகி வருகிறது. ஒரு நேப்கினை பயன்படுத்துகிறோம். அதன்பிறகு அதை அப்படியே குப்பையில் வீசி விடுகிறோம். இப்படி  பயன்படுத்தப்பட்ட நேப்கின்கள் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமாராக 1,13,000 டன்கள் அளவிற்கு வீசப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்துதலில் பெரிய பிரச்னையாகி வருகின்றன.

முக்கியமாக அந்த நேப்கின்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உலக வெப்பமயமாதலில் பெரும் காரணியாக மாறியிருக்கிறது. இதற்குதான் தீர்வு கொண்டு வந்திருக்கிறார் நிதிஷ் N R.‘‘சொந்த ஊர் கேரளா திருவனந்தபுரம். படிச்சது பி.டெக். +2 படிக்கும் போதே அம்மா கூட சேர்ந்து நானும் டியூஷன் எடுக்க ஆரம்பிச்சேன். அப்பவே அம்மா எனக்கு அபாக்கஸ் சொல்லிக்கொடுத் தாங்க. நானும் அதில் தேர்ச்சிப் பெற்று பலருக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். அபாக்கஸ் மூலம் எனக்கு சிந்துவின் நட்பு கிடைச்சது. அவங்க, சென்னைல ஒரு அபாக்கஸ் இன்ஸ்டிடியூட் வைக்கணும்னு கூப்பிட்டாங்க.

அதேநேரம் நான் பி.டெக் முடிச்சேன். எனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக நாமே ஒரு நிறுவனத்தை அமைத்து பலருக்கு வேலை கொடுக்கலாம்ன்னு விரும்பினேன். அந்த எண்ணம் தான் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் ஒன்றை அமைக்க தூண்டியது. ஏற்கனவே சிந்துவும் அபாக்கஸ் குறித்து கேட்டு இருந்ததால், நானும் சிந்துவும் சேர்ந்து இந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தோம்’’ என்ற நிதிஷ் துவங்கியது நேப்கின் வெண்டிங் மெஷின்களை தயாரிக்கும் நிறுவனம்.‘‘Innovosoft Technologies இது தான் எங்க நிறுவனம்.

இங்கு நேப்கின் வெண்டிங் மெஷின்களை தயாரிக்கிறோம். இதனை கல்லூரி, பள்ளிகளில் இன்ஸ்டால் செய்து வந்தோம். ஒரு நாள் திடீரென்று சிந்து என்னிடம், ‘‘நேப்கின் வெண்டிங் கருவி சரி. ஆனா பயன்படுத்துவதை எப்படி டிஸ்போஸ் செய்றது’’ன்னு கேட்டாங்க. அது என் மண்டையில் சம்மட்டி அடித்தது போல் இருந்தது. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த நேப்கின் இன்சினிரேட்டர். அதாவது வீடுகள், சின்ன அலுவலகங்கள்ல உள்ள டாய்லெட்ல கூட வசதியா ஒரு முகம் பார்க்கற கண்ணாடி மாட்டிக்கிற மாதிரி இந்த மெஷினை மாட்டிக்கலாம்’’ என்னும் நிதிஷ் இந்த மெஷின் உருவாக்கத்தில் நிறைய கேள்விகள், நிறைய சோதனைகளைக் கடந்திருக்கிறார்.

‘‘இதற்கு முன்னாடி நிறைய மெஷின்கள் மார்க்கெட்ல இருக்கு, ஆனால் அந்த மெஷின்களில் எல்லாமே நேப்கின்களை அழிக்க குறைந்தது அரை மணி நேரம் ஆகும். மேலும் அளவுலயும் ரொம்ப பெருசா இருக்கும். எந்த முறை கொண்டும் நாம பிளாஸ்டிக்கை அழிகவே முடியாது. குறைந்தது 800டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தாதான் பிளாஸ்டிக்கை அழிக்க முடியும். 800 டிகிரி அளவுக்கு வெப்பம் ஒரே நேரத்துல வந்தா அதுல இருந்து வரக்கூடிய புகை நேப்கின் வேஸ்ட்டை விட அதிகமா சுற்றுப்புறத்தை மாசுப்படுத்துற மாதிரிதான் இருக்கும். அதனால 800 டிகிரியை, 400 டிகிரி என இரண்டாக பிரித்தேன். அதாவது ஒரே நேப்கினை இரண்டு முறை எரிக்கற மாதிரி மெஷின் உருவாக்கினேன். அதுவும் 3 முதல் 4 நிமிடங்கள்ல பயன்படுத்தப்பட்ட நேப்கினை நீங்க அழிச்சிடலாம் .

எப்படி இயங்குகிறது

‘சாதாரண மிக்ஸி, கிரைண்டரை விடவும் இதுக்கு ஆகுற மின்சார செலவு குறைவுதான். மேலும் 800 டிகிரி வெப்பம்கிறதால இதுக்குனு தனியா பயன்படுத்துகிற பிளக் கூட வேண்டாம். இந்த மெஷினை வாங்கி உங்க டாய்லெட்ல சுலபமா மாட்டிக்கலாம். அதன்பிறகு பிளக்கை இணைச்ச உடனே எப்படி மிக்ஸி, இண்டெக்‌ஷன் ஸ்டவ் இதுகள்ல ஒரு LED லைட் எரியுமோ அதே பாணியில இந்த மெஷின்லயும் ஒரு பச்சை நிற லைட் எரியும். மெஷின் பயன்படுத்துறதுக்கு தயார்னு அர்த்தம். அப்பறம் நீங்க பயன்படுத்திய நேப்கின இதுல வெச்சு பட்டனை அழுத்தினா போதும் 3-4 நிமிஷத்துல உங்க நேப்கின் சாம்பலா மாறிடும்.

பிறகு நீங்க அதை குப்பையிலயோ அல்லது டாய்லெட்ல கொட்டியோ சுத்தம் செய்துக்கலாம். மேலும் இதுல ஒரு வென்டிலேட்டரும் இருக்கும். அதை நீங்க ஜன்னல் வழியா வெளியே பைப் மூலமா கொடுத்தா இதுல வர புகையையும் நீங்க வீட்டுக்குள்ள வர விடாம தடுக்கலாம். பல ஆய்வுகள் மற்றும் தடைகளை தாண்டி மெஷினை உருவாக்கினோம். ஆனா எப்படி இதை மக்களிடம் சேர்ப்பதுன்னு எனக்கு தெரியல’’ என்று தயக்கத்தில் இருந்தவருக்கு அவரின் உறவுக்கார பெண் மைதிலி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

‘‘மைதிலி மெஷினை பற்றி மட்டும் இல்லாமல் நேப்கின் கழிவுகளால எவ்வளவு சுற்றுப்புற மாசு ஏற்படுதுங்கறத எடுத்துச் சொல்லணும்னு ஐடியா கொடுத்தாங்க. தினம் தினம் கழிவுநீர் வாய்க்கால கிளீன் செய்யற மக்கள் எவ்வளவு அவதிப்படுறாங்க. சுற்றுச்சூழல் எவ்வளவு மாசடையுது இப்படி நிறைய வீடியோக்கள் சேகரிச்சு, அதைகொண்டு ஒவ்வொரு கல்லூரி, கம்பெனிகள், ஸ்கூல் இப்படி நாங்களே பிரச்சாரம் செய்தோம்.

வீடுகளுக்கு, சின்ன கம்பெனிகளுக்கு ரூ.9,500க்கும், பள்ளி, கல்லூரி மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ரூ.14,000க்கும் இந்த கருவியை வழங்கி வருகிறோம். தமிழ்நாட்டில் மட்டும் இல்லை வெளிநாட்டிலும் இதற்கான மார்க்கெட்டிங் வேலையை மைதிலி தான் பார்த்துக்கிறாங்க. இது பெண்களின் அந்தரங்கமான விஷயம். அதைப் பற்றி பெண்களுக்கு தான் தெரியும், புரிய வைக்கவும் முடியும். எனக்கு பக்கபலமே இந்த இரண்டு பெண்கள் தான்’’ என்கிறார் இந்த நேப்கின் டிஸ்ட்ராயர். இப்போது இலங்கை, பூட்டான், ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் இவரின் டிஸ்ட்ராயர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!