புரெவி புயல் எதிரொலி: 14 விமானங்கள் ரத்து 20 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: புரெவி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 3வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டு  தூத்துக்குடி, மதுரை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய 14  விமானங்கள் ரத்தானதோடு, 20க்கும் மேற்பட்ட  விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால், பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். புரெவி புயல் தாக்கம் காரணமாக   சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, திருச்சி, கொச்சி விமானங்கள் ரத்தானது. நேற்று திருச்சி விமானம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் 3 விமானங்கள், தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் 3 விமானங்கள், சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு மதுரை சென்றுவிட்டு, மதுரையிலிருந்து பகல் 12.15 மணிக்கு சென்னைக்கு வரும் 2 விமானங்கள், பகல் 11.30 மணிக்கு கொச்சிக்கு போய்விட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னைக்கு வரும் 2 விமானங்கள், திருவனந்தபுரத்திற்கு காலை 9.30 மணிக்கு சென்றுவிட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை திரும்பும்  2 விமானங்கள்  என மொத்தம் 14  விமானங்கள்  ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே, சென்னையிலும் பலத்த மழை பெய்ததால் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. குறிப்பாக சென்னையிலிருந்து  மும்பை, கொல்கத்தா, புனே, புவனேஸ்வர், அகமதாபாத், ஹுப்ளி, கவுகாத்தி, திருச்சி, மதுரை, கோவா, ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, ஜோத்பூர், கோழிக்கோடு, துபாய், அபுதாபி, இலங்கை உட்பட 20க்கும் மேற்பட்ட  விமானங்கள்  தாமதமாக புறப்பட்டுச் சென்றன.  இதன் காரணமாக, விமான நிலையம் வந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Related Stories: