×

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகு வழியாக வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், கரையோர மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்புகின்றன. இதையொட்டி, மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, 2,400 ஏக்கர் பரப்பளவு  கொண்டது. இதன் கரையின் நீளம் சுமார் 3 கிமீ தூரம் கொண்டது. இதன், முழு கொள்ளளவு 694 மில்லியன் கனஅடி. இந்த ஏரியின் தண்ணீர் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இதனால், இந்த ஏரியில் இருந்து 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் மதுராந்தகம், அருங்குணம், காவாதூர், தேவாதூர், முள்ளி வளர்பிறை உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன  வசதியை தருகிறது.

இந்நிலையில், கடந்த நிவர் புயல் காரணமாக பெய்த மழையின்போது ஏரி நிரம்பியது. தற்போது, புரெவி புயல் காரணமாக பெய்த மழையல் ஏரிக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரிக்கரையின் பாதுகாப்பு கருதி  நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.  வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஏரியின் கலங்கல் மற்றும் ஷட்டர்கள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்த உபரிநீர் கிளியாற்றின் வழியாக வெளியேற்றப்படும்போது கரையோரம் வசிக்கும்  கத்திரிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, வீராணகுண்ணம், தச்சூர் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால், மதுராந்தகம் வருவாய் துறையினர், கடந்த வாரம் தண்டோரா  மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். மேலும், ஆற்று தண்ணீரில் குளிப்பது, துணி துவைப்பது, ஆற்றை கடப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.  அனைவரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : Madurantakam Lake , 8,000 cubic feet of water released through Madurantakam Lake reaches full capacity: Coastal people warned
× RELATED நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது...