×

ஆவடி, அம்பத்தூர் பகுதியில் 3 பேரை வெட்டி செல்போன் பறிப்பு: நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம்

ஆவடி: நள்ளிரவில்  3 பேரை வெட்டி செல்போன் பறித்த கும்பலை போலீசார் தேடுகின்றனர். ஆவடி அடுத்த கொள்ளுமேடு சூர்யா தெருவை சேர்ந்தவர் மதன்குமார்(23). இவரது தம்பி அஜித்குமார்(21).  இருவரும் ஆவடி மாநகராட்சியில் துப்புரவு  பணியில் ஒப்பந்த ஊழியர்கள். சகோதரர் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆவடி, சி.டி.எச் சாலை, பஸ் நிலையம் அருகில் தூய்மைப்பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, இரு பைக்கில்  6 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.
அவர்களில் இருவர் பைக்கில் இருந்து இறங்கி வந்து மதன்குமார், அஜித்குமார் ஆகியோரிடம் செல்போன்களை பறிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   இதனையடுத்து, ஆத்திரமடைந்த  அக்கும்பல் இருவரையும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து சரமாரியாக வெட்டியது. பின்னர், அக்கும்பல் அவர்களிடம் இருந்த இரு செல்போன்களை பறித்து செல்போன்களுடன் அங்கிருந்து பைக்கில் தப்பிவிட்டனர்.

இதில்,  தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மதன்குமார், அஜித்குமார் இருவரையும் வாகன ஓட்டிகள் மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை  அளித்து வருகின்றனர். மேலும்,  மதன்குமாருக்கு தலையில் 20 தையல்களும், அஜித்குமாருக்கு தலையில் இரு தையல்களும் போடப்பட்டுள்ளது. இவர்களில் மதன்குமார் கவலைக்கிடமாக உள்ளார்.இதேபோல்,  அம்பத்தூர் அருகே  மண்ணூர்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சஜன்(21). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் சஜன் இரவு பணிக்கு கம்பெனிக்கு சென்றார்.  பின்னர், அவர் 2:30 மணியளவில்  வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார்.  அம்பத்தூர் தொழிற்பேட்டை, சி.டி.எச் சாலை, பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, இரு பைக்குகளில் 6 பேர் வந்தனர்.  பின்னர்,  அவர்கள் சஜனை சரமாரியாக  கத்தியால் வெட்டியுள்ளனர்.

பின்னர் அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், தலையில் படுகாயம் அடைந்த சஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அண்ணாநகர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேற்கண்ட இரு வழிப்பறி சம்பவங்கள் குறித்து ஆவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன்  வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் வழிப்பறி
பட்டாபிராம் அமுதூர்மேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி(43).  கூலித்தொழிலாளி. நேற்று காலை  வீட்டு முன்பு நடைபயிற்சியில் ஈடுபட்டார்.  அப்போது, அங்கு பைக்கில் வந்த வாலிபர் தேவியின் கழுத்தில் கிடந்த 5 சவரன்  தங்க சங்கிலியை பறித்து தப்பினார். புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.Tags : Avadi ,Ambattur ,gang , Avadi, Ambattur area 3 people flush cut Cellphone: Midnight Mystery Gang pump
× RELATED பொதுமக்கள் அவதி சாலை பாதுகாப்பு விழா