×

காஞ்சிபுரம் அருகே சோகம்: பாலாற்றில் அடித்து சென்ற 3 சிறுமிகள் சடலமாக மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, பாலாற்றில் குளிக்கும்போது வெள்ளத்தில் அடித்து சென்ற 3 சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்டனர். வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயலால் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில்  அணைக்கட்டு திறக்கப்பட்டதால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்று தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது.காஞ்சிபுரம் தும்பவனம்  விநாயகர் கோயில் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஜெய (15), சுப (14) ஆகிய மகள்கள் இருந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பூர்ணிமா (15).
நேற்று முன்தினம் மாலை ஜெய, சுப, பூர்ணிமா ஆகியோர் பாலாற்றில் குளிக்க சென்றனர். அப்போது, ஆற்றில் அதிகளவு மணல் எடுக்கப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேரும் அடித்து சென்றனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, இரவு 8 மணிவரை சிறுமிகளை தேடினர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அப்போது இருள் சூழ்ந்ததால், அவர்கள்  திரும்பி சென்றனர். இந்நிலையில் நேற்று காலை பூர்ணிமா, ஜெய ஆகியோர் சடலமாக கரையில் கிடப்பதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று, சடலங்களை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, மாயமான சுபயை மாலையில் சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக, மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் இரவு இருள் சூழ்ந்ததால், மீட்பு படையினர், திரும்பிச் சென்றனர். நேற்று காலை தாமதமாக 8 மணிக்கு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட  முயன்றனர். இதையறிந்ததும், டிஐஜி சாமுண்டீஸ்வரி, அங்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தனிமரமான தாய்…
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சம்பத், ராஜேஸ்வரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். இதையடுத்து ராஜேஸ்வரி, மகன் மற்றும் மகள்களுடன் வசித்தார். இந்தவேளையில், கடந்த 6 மாதத்துக்கு முன், அவரது  மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதைதொடர்ந்து, அவருக்கு துணையாக இருந்த மகள்களும் இறந்ததால், ராஜேஸ்வரி தனிமரமாகி விட்டார்.



Tags : girls ,Kanchipuram ,lake , Tragedy near Kanchipuram: 3 girls' bodies recovered
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...