தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை குறைக்க கோரிய மனு முடித்து வைப்பு

மதுரை: நெல்லையைச் சேர்ந்த கிரஹாம்பெல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கான கல்வி கட்டணம் கடந்த ஆண்டைப் போலவே நிர்ணயிக்கப்பட்டது. சில பிரிவு கட்டணம் பல மடங்கு  உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 சதவீதம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். கடந்தாண்டு 6 பேர் மட்டுமே  மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். தற்போது 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார்  மருத்துவக்கல்லூரிகளில் சீட் கிடைத்துள்ளது. தனியார் கல்லூரி கட்டணத்தை பலரால் செலுத்த முடியவில்லை. எனவே, தனியார் மருத்துவக்கல்லூரிகளின் தற்போதைய கல்வி கட்டணத்தை ரத்து செய்து அல்லது குறைவாகவும் நிர்ணயம்  செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் அதன் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தனியார்  மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது. எனவே, இதில் தலையிட வேண்டியதில்லை எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: