கல்லூரிகள், மாணவர்களின் நலன் கருதி சூரப்பா விவகாரத்தில் அரசு தரப்பில் நல்ல முடிவு: ஐகோர்ட் கிளை நம்பிக்கை

மதுரை:  குமரி மாவட்டம், ஈத்தாமொழியைச் சேர்ந்த மணி தணிகைகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. விசாரணைக்குழு  அமைத்து நவ. 11ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரையும், மிக உயர்ந்த பதவியில் இருப்பவரை களங்கப்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான  விசாரணைக்கு தடை விதிக்கவும், அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சூரப்பா தரப்பில்,  தன்னையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனு செய்யப்பட்டது.

நீதிபதிகள், ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி வேந்தர் மற்றும் தமிழக அரசுத் தரப்பில் உரிய முடிவெடுப்பார்கள் என நம்புகிறோம்’’ எனக்கூறி, விசாரணையை டிச. 9க்கு தள்ளி  வைத்தனர். 

Related Stories: