5 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது புழல் ஏரி: உபரிநீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல், 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல். இதன் மொத்த  கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது தண்ணீர் இருப்பு 2,936 மில்லியன் கன அடி. ஏரியின் உயரம் 21.20 அடி. கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து 20 அடி வரை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது புழல் ஏரி. தொடர்  மழையின் காரணமாக விநாடிக்கு 1,800 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, 153 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தொடரும் கனமழையால், புழல் ஏரிக்கு நீர்  வரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, நேற்று மாலை 3 மணி அளவில், விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. எனவே, இந்த தண்ணீர் செல்லும் கால்வாய் கரையோரம் உள்ள செங்குன்றம் சாமியார் மடம், வடகரை பாபா நகர், தண்டல் கழனி. புழல் -  கிராண்ட்லைன், திருநீலகண்டநகர், தமிழன் நகர், காந்தி அருள் நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும்,  பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, பொதுப்பணித் துறையினர் தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு முன்பு, கடந்த 2015ம் ஆண்டு புழல் ஏரி நிரம்பிதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: