ஐகோர்ட் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூல் 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு: ஜன.8க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சென்னை: ஐகோர்ட் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள் ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகளுக்கு எதிராக உயர்  நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்குகள்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது, பள்ளிகள் சார்பில் அதிக கட்டணம் வசூலிக்கவில்லை  எனவும்,உயர் நீதிமன்ற உத்தரவுபடியே கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த  நீதிபதி, அப்பள்ளிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தார்.  சிபிஎஸ்இ பள்ளியை பொறுத்தவரை 32  பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளதாகவும், விசாரணையில் கோவை வடவள்ளி  மற்றும் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த பி.எஸ்.பி.பி என்ற பெயர் கொண்ட இரண்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, மெட்ரிக்குலேசன் பள்ளியின்  இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு   செய்த நீதிபதி, அந்த 2 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார். மேலும், இந்த  வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு இரு தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை  ஜனவரி 8ம்  தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: