புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் மீண்டும் மிதக்கிறது சென்னை:மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை:  புரெவி புயல் காரணமாக கடந்த 2ம் தேதி இரவு முதல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். கடந்த 2 நாட்களாக  பெய்து வரும் மழை காரணமாக சென்னை நகரில் தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், முகப்பேர், வில்லிவாக்கம், தரமணி, வேளச்சேரி, முடிச்சூர்,  ஊரப்பாக்கம், பெரம்பூர், முகப்பேர், ஓட்டேரி, புரசைவாக்கம், வியாசர்பாடி, புளியந்தோப்பு, புழல், செங்குன்றம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வேளச்சேரி பேபி நகர், நேரு நகர்,  விஜயாநகர்,  வில்லிவாக்கம் பாபா நகர், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.

இந்த மழை நீரை அகற்ற பொதுமக்கள் முறையிட்டும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறனர்.  இந்த நிலையில், தொடர் மழை  காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மிதக்கிறது. அண்ணாசாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேளச்சேரி மெயின்ரோடு, வால்டாக்ஸ் சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, ஜிஎஸ்டி  சாலை, முத்துசாமி சாலை, பிராட்வே சாலை, திருமங்கலம் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் குளம் போல்  தேங்கி கிடந்தததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முக்கிய சாலைகளான அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் சாலையில் தேங்கி கிடந்த  தண்ணீரை அகற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடைபாதைகளில் செல்லும் பாதசாரிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.  இந்த நிலையில், ெதாடர்ந்து 2 நாட்களுக்கு மழை  இருக்கும் என்பதால், பொதுமக்கள் பணிக்கு எப்படி செல்வது என்பது தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: