×

இரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசிலாந்து 519/7 டிக்ளேர்

ஹாமில்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
செடான் பார்க் மைதானத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசிய நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்திருந்தது. யங் 5,  லாதம் 86 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 97 ரன், ராஸ் டெய்லர் 31 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். டெய்லர் 38, நிகோல்ஸ் 7, பிளண்டெல் 14, மிட்செல் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய வில்லியம்சன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். 10 மணி, 24 நிமிடத்துக்கு களத்தில் இருந்த அவர் 251 ரன் (412 பந்து, 34 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜோசப் பந்துவீச்சில் சேஸ்  வசம் பிடிபட்டார்.

நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது ( 145 ஓவர்). ஜேமிசன் 51, சவுத்தீ 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோச், கேப்ரியல் தலா 3,  ஜோசப் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்திருந்தது. பிராத்வெய்ட் 20, கேம்ப்பெல் 22 ரன்னுடன் களத்தில்  இருந்தனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : Williamson ,New Zealand , Williamson hits double century: New Zealand declare 519/7
× RELATED சதம் விளாசினார் கேப்டன் வில்லியம்சன்:...