×

ராகுல் 51, ஜடேஜா 44* ரன் விளாசல் 11 ரன் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா: டி20 அறிமுகத்திலும் அசத்தினார் நடராஜன்

கான்பெரா: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள்  போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. கான்பெரா, மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. கேப்டன்  ஆரோன் பிஞ்ச், முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் அறிமுகமானார். ராகுல், தவான் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். தவான் 1 ரன் மட்டுமே எடுத்து ஸ்டார்க் வேகத்தில்  ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி 9 ரன் எடுத்த நிலையில், ஸ்வெப்சன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஓரளவு தாக்குப்பிடித்த ராகுல் - சாம்சன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 38 ரன் சேர்த்தது. சாம்சன் 23 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஹென்ரிக்ஸ் பந்துவீச்சில் ஸ்வெப்சனிடம் பிடிபட்டார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 2 ரன்னில்  அவுட்டாகி ஏமாற்றமளித்தார். சக வீரர்கள் உள்ளே-வெளியே அணிவகுப்பு நடத்தினாலும், உறுதியுடன் போராடிய ராகுல் 37 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 51 ரன் எடுத்து (40 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஹென்ரிக்ஸ் பந்துவீச்சில் அபாட்  வசம் பிடிபட்டார். அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா 16 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடி ஆஸி. பந்துவீச்சை சிதறடிக்க, இந்திய ஸ்கோர் எகிறியது. குறிப்பாக, ஹேசல்வுட் வீசிய 19வது  ஓவரில் அவர் 3 பவுண்டரி, 1 சிக்சரை பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 23 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்து ஜடேஜாவின் ஹெல்மெட்டை பலமாகத் தாக்கி பேக்வேர்டு பாயின்ட் திசையில்  பறக்க, ஹென்ரிக்ஸ் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார்.

அடுத்த பந்தில் சுந்தர் (7 ரன்) ஆட்டமிழந்தாலும், காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா 4வது மற்றும் 5வது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி மிரட்டினார். இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்  குவித்தது. ஜடேஜா 44 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), தீபக் சாஹர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஹென்ரிக்ஸ் 3, ஸ்டார்க் 2, ஸம்பா, ஸ்வெப்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஜடேஜா காயம் அடைந்ததால், புதிய  விதியின்படி ‘மூளை அதிர்ச்சி’ மாற்று வீரராக சாஹல் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி. அணி களமிறங்கியது. ஷார்ட் - பிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 56 ரன்  சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. பிஞ்ச் 35 ரன் (26 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்மித் 12 ரன் எடுத்து சாஹல் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மேக்ஸ்வெல் 2 ரன் எடுத்து அறிமுக வேகம் நடராஜன்  பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.

பொறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ஷார்ட் 34 ரன் (38 பந்து, 3 பவுண்டரி) எடுத்த நடராஜன் வேகத்தில் ஹர்திக் வசம் பிடிபட, ஆஸி. அணி 15 ஓவரில் 113 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது. மேத்யூ வேடு 7 ரன்,  ஹென்ரிக்ஸ் 30 ரன்  (20 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். ஸ்டார்க் 1 ரன் மட்டுமே எடுத்து நடராஜன் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, ஆஸி. அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் மட்டுமே எடுத்து  11 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அபாட், ஸ்வெப்சன் தலா 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாஹல், நடராஜன் தலா 3 விக்கெட், சாஹர் 1 விக்கெட் வீழ்த்தினர். மாற்று வீரராகக் களமிறங்கி 4  ஓவரில் 25 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றிய சாஹல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி.க்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 அறிமுக போட்டிகளில் அசத்திட நடராஜன் பாராட்டுகளை அள்ளினார். மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்  4 ஓவரில் 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆஸி. ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி சிட்னியில் நாளை நடைபெறுகிறது.

Tags : Rahul 51 ,Jadeja 44 ,Natarajan ,Aussies ,T20 debut ,India , Rahul 51, Jadeja 44 * India beat Aussies by 11 runs: Natarajan stunned in T20I debut
× RELATED 79 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அசத்தல்