×

விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்ததும் ஒரு சில வாரத்தில் தடுப்பூசி கிடைக்கும்: அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘ கொரோனா தடுப்பூசிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. மருத்துவ விஞ்ஞானிகளின் ஒப்புதல் கிடைத்ததும், அடுத்த சில வாரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்’ என அனைத்துக்  கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இங்கிலாந்து, ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து முன்கள பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி வழங்க அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்து. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. பிரதமர் மோடியும் சமீபத்தில் தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வகங்களுக்கு நேரில்  சென்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு நடக்கும் 2வது அனைத்துக் கட்சி கூட்டம் இது.

பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்த இக்கூட்டத்தில் திமுகவின் டி.ஆர்.பாலு, காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரசின் சரத் பவார், திரிணாமுல் காங்கிரசின் சுதிப்  பந்யோபாதியாய், சமாஜ்வாடியின் ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் மொத்தம் 8  கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் வெவ்வேறு கட்டத்தில் உள்ளன. இதில், உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்படும் 3 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளன. கொரோனா தடுப்பூசிக்காக இன்னும் நீண்ட காலம் காத்திருக்க  வேண்டிய அவசியமில்லை. சில வாரத்தில் தயாராகிவிடும் என மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

மருத்துவ விஞ்ஞானிகள் ஒப்புதல் கிடைத்ததும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். முதற்கட்டமாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும், அதோடு போலீசார், சுகாதாரப்  பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும், பாதிப்பு அதிகமுள்ள முதியோர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். இதற்கான பட்டியல் மாநில அரசு தரும் தகவல்கள் அடிப்படையில் தயார் செய்யப்படும்.தடுப்பூசி விநியோகத்தில் மத்திய  அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படும். தடுப்பூசி தயாரிப்பிலும், அதை விநியோகிப்பதிலும் இந்தியா நிபுணத்துவம் பெற்ற நாடு. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிவதில் நம் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.  பல நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசிகளின் பெயர்கள் சந்தையில் பெரிய அளவில் பேசப்பட்டாலும், மலிவான, பாதுகாப்பான தடுப்பூசியை  உலகம் எதிர்பார்க்கிறது.

எனவே அத்தகைய மலிவான, தரமான தடுப்பூசியை தயாரிக்கும் திறன் படைத்த இந்தியாவை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது இயற்கையானது. கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான செய்திகள் பரவாமல் நாம் தடுத்திட வேண்டும்.  அத்தகைய புரளிகள் தேச விரோதமானவை, மனித குலத்திற்கே விரோதமானவை. எனவே புரளிகளை புறம்தள்ளுவதில் அனைத்து கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதுணையாக இருக்க  வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முதலில் 2 கோடி பேருக்கு
அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பூசி கிடைத்ததும் முதற்கட்டமாக ஒரு கோடி டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும்.  அதைத் தொடர்ந்து போலீசார், ஆயுதப் படையினர், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 2 கோடி முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்படும்’’ என்றார்.

விலை எவ்வளவு?
கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுமா? அனைவருக்கும் வழங்கப்படுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது. பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது, ‘பீகார் மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’  என பாஜ வாக்குறுதி அளித்தது. ‘இது பீகார் மக்களுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி தரப்படும்’ என மத்திய அமைச்சர்கள் சிலர் கூறினர். இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்றைய கூட்டத்தில் கூறுகையில், ‘‘தடுப்பூசி  விலை தொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், விலையை காட்டிலும் பொது சுகாதாரத்திற்கே முன்னுரிமை தரப்படும்’’ என்றார்.


Tags : scientists ,PM ,meeting , The vaccine will be available in a few weeks after the scientists approve it: the Prime Minister's announcement at the all-party meeting
× RELATED கொரோனா தடுப்பூசி போடும் பணியை...