இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டாவிட்டால் டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்த்: டெல்லியில் விவசாயிகள் அறிவிப்பு: சுங்க சாவடிகளை முற்றுகையிட முடிவு

புதுடெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் இன்று நடத்தும் 5ம் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டாவிட்டால், வரும் 8ம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தப் போவதாக டெல்லியில் விவசாயிகள்  அறிவித்துள்ளனர். மேலும், டெல்லிக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் முடக்கப் போவதாகவும், சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3  வேளாண் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் முன்னெடுத்தனர். டெல்லி நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர், லாரிகளுடன் டெல்லி  எல்லையில் உள்ள புறநகர் பகுதிகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் பல்வேறு மாநில விவசாயிகளும் கைகோர்த்துள்ளனர்.விவசாயிகளின் போராட்டத்தை கைவிடுமாறு, மத்திய அரசு அவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு கடந்த 1ம் தேதியும், நேற்று முன்தினமும் நடத்திய 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. நேற்று முன்தினம் 8 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது, 2 வேளாண்  சட்டங்களில் மட்டும் 8 திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை ஒருபோதும் மாற்றப்படாது என்றும் கூறினார்.  ஆனால், புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதாக, சட்டத்தில் திருத்தம் செய்வதாக கூறிய மத்திய அரசின் கோரிக்கையை  நிராகரித்தனர். ஏற்கனவே 2 நாட்கள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்த நிலையில், மத்திய அரசு இன்று 3வது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்நிலையில், டெல்லி எல்லையில் நேற்று தொடர்ந்து 9வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. இன்றைய பேச்சுவார்த்தையில் தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும், நாடு தழுவிய  பாரத் பந்த் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்க தலைவர் குர்னம் சிங் சதோனி செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில்,  ‘‘அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கூடி ஆலோசித்தோம். இதில், 5ம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்கள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, வரும்  8ம் தேதி ‘பாரத் பந்த்’ போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். அதோடு, டெல்லிக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் முடக்கப் போகிறோம். அனைத்து சுங்கச்சாவடிகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். எங்களது ஒரே  கோரிக்கை 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே,’’ என்றார்.

ஏற்கனவே, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் 8ம் தேதி முதல் வடமாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்கப்படுவதாக அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், விவசாயிகளும்  நாடு தழுவிய பந்த் போராட்டத்தை நடத்தப் போவதாக எச்சரித்துள்ளதால், இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விவசாயிகளை அகற்றகோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லியில் போராட்டத்துக்காக குவிந்துள்ள விவசாயிகளை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மாணவர் ரிஷாப் சர்மா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ‘புகாரியில் உள்ள  நிரான்கரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட டெல்லி போலீசார் அனுமதித்ததாக கூறினார்கள். ஆனால், எல்லைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. எல்லையில் நடக்கும் போராட்டத்தின் காரணமாக சாலைகளை  போராட்டக்காரர்கள் தடை செய்துள்ளனர். வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளது. சிகிச்சைக்காக டெல்லியில் இருந்து செல்பவர்களும், வருபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போராட்டத்துக்காக டெல்லியில் குவிந்துள்ள  விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கனடா தூதரிடம் கண்டனம்

விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ சமீபத்தில் ஆதரவு தெரிவித்தார். இது தேவையற்ற, தவறான தகவல் என உடனடியாக வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. இதேபோல், கனடா  நாட்டு அமைச்சர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா நாட்டுத் தூதருக்கு வெளியுறவுத் துறை நேற்று சம்மன் அனுப்பி அழைத்தது.  அப்போது, ‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில்  கனடா தலையிடுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது,’ என அவரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: