ஆபத்து விளைவிக்கும் போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ஐநா.வில் இந்தியா ஆதரித்து வாக்கு

புதுடெல்லி: ஆபத்தான போதைப் பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க, இந்தியா ஆதரவு அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மருந்துகள் ஆணையத்தின் 63வது கூட்டம் கடந்த புதனன்று நடந்தது. அப்போது சர்வதேச  அளவில் கஞ்சாவை ஒழுங்குபடுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி கஞ்சாவை ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போதைப்பொருள் மருந்துகள்  ஆணையத்தில் மொத்தமுள்ள 53 உறுப்பு நாடுகளில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 27 நாடுகள் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன.

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகள் ஐநா.வின் முடிவுக்கு எதிராக வாக்களித்தன. உக்ரைன் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 59 ஆண்டுகளாக கஞ்சா மீது நீடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள்  விலக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, 50க்கும் மேற்பட்ட நாடுகள் கஞ்சாவை மருத்துவ திட்டங்களுக்காக பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கஞ்சாவுக்கு  இந்த மாநாட்டில் ஆதரவு அளித்த இந்தியாவில், கஞ்சா ஆபத்தான போதைப் பொருட்கள் பட்டியலில் இருக்கிறது. இதை பயன்படுத்துபவர்கள், வளர்ப்பவர்கள், வைத்திருப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: