×

மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 இடங்களில் அதீத கனமழை பெய்துள்ளது என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை இயல்பு நிலையை விட 2 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மைய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கனமழையால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும், நீரில் மூழ்கியும் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். சிதம்பரம் அருகே கிள்ளையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி கனகம்(65) உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்ததால் இடிபாடுகளில் சிக்கி கனகம் உயிரிழந்தார்.

புரெவி புயலால் ராமேஸ்வரத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் வலுவிழந்த போதிலும் மின்சாரம் வழங்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மின்சாரம் துண்டிப்பால் 3 நாட்களாக ராமேஸ்வரம் தீவு இருளில் மூழ்கியுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன.

1964ம் ஆண்டு புயலில் சேதம் அடைந்த தனுஷ்கோடி தேவாலய சுவர் கடல் சீற்றத்தால் முற்றிலும் இடிந்து விழுந்தது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்வதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வலுவிழந்த புரெவி புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் - கன்னியாகுமரி இடையே இன்று இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளது.

Tags : Gulf of Mannar: Meteorological Department , Meteorological Center
× RELATED கர்ப்பகால மனச்சோர்வை நீக்கும் பிராணாயாமம்!